Home கருத்தாய்வு ம.இ.காவில் தொடங்கியது தலைமைத்துவ பூசல்! அறிக்கைப் போராட்டம் தொடர்கின்றது!

ம.இ.காவில் தொடங்கியது தலைமைத்துவ பூசல்! அறிக்கைப் போராட்டம் தொடர்கின்றது!

679
0
SHARE
Ad

Palanivel-Sliderகோலாலம்பூர், மே 10 – பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பலரும் எதிர்பார்த்தபடி ம.இ.காவிலும் தலைமைத்துவ போராட்டம் தொடங்கிவிட்டது. தினமும் தமிழ்ப் பத்திரிக்கைகளில் கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் பொதுத் தேர்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என ஒரு சாராரும், அவர் பதவி விலகக் கூடாது, தனது பணியில் தொடர வேண்டும் என ஒரு சாராரும் பத்திரிக்கைகளில் அறிக்கைப் போராட்டத்தைத் தொடங்கி விட்டனர்.

#TamilSchoolmychoice

தேர்தல் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று தங்களின் கட்சித் தலைவர் பதவிகளிலிருந்து விலகப் போவதாக ம.சீ.ச. தலைவர் சுவா சொய் லெக்கும், கெராக்கான் தலைவர் கோ சூ கூன்னும் ஏற்கனவே அறிவித்து விட்டனர்.

அதனைத் தொடர்ந்து பகாங் மாநில முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவர் சி.கே.சந்திரன் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று ம.கா.வின் தேசியத் தலைவர் பழனிவேல் பதவி விலக வேண்டும் என்று துணிந்து ஓர் அறிக்கை விட்டு, பூனைக்கு மணி கட்டுவதைப் போல் முதல் பட்டாசைக் கொளுத்திப் போட்டார்.

அதனைத் தொடர்ந்து,YSS எனப்படும் ம.இ.காவின் சமூக அறவாரியத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் டெனிசன் ஜெயசூரியாவும் பழனிவேல் பதவி விலக வேண்டுமென அறிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பல ம.இ.கா தலைவர்கள் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளில் பழனிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளனர்.

இதிலிருந்து, ம.இ.கா தலைவர் பதவியிலிருந்து பழனிவேல் விலக வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் பரவி வருவதையும், அதனைத் தடுக்க வேண்டும் என ம.இ.கா தலைமைத்துவம் முனைப்பு காட்டி வருவதும் தெளிவாகத் தெரிகின்றது.

காரணம், பழனிவேலுவைத் தற்காத்து அறிக்கை விடுத்த தலைவர்களில் பலர் பழனிவேலுவுக்கு நெருக்கமானவர்கள் என்பதோடு எதிர்வரும் கட்சித் தேர்தலில் கட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட குறி வைத்துள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிக்கை விடுத்தவர்கள் யார் யார்?

ம.இ.காவின் வியூக இயக்குநரும் முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி, பழனிவேலுவை இந்த தருணத்தில் விலகச் சொல்வது விவேகமான செயல் அல்ல என்று அறிக்கை விடுத்திருக்கின்றார்.

அண்மையக் காலங்களில் மக்களின் மன ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப கட்சிக்கும், தேசிய முன்னணிக்கும் எதிராகக் கூட பல அறிக்கைகளை துணிச்சலாக விடுத்து வருபவர் வேள்பாரி.

இவர், வரவிருக்கும் ம.இ.கா கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவரைத் தொடர்ந்து, ம.இ.கா வின் இளைஞர் பகுதித் தலைவரும் ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியில் போட்டியிட்டவருமான டி.மோகன், 13வது பொதுத் தேர்தலில் ஏற்பட்டது நாடு தழுவிய அரசியல் சுனாமி என்றும் அதற்காக பழனிவேலுவுக்கு பதவி விலகச் சொல்லி நெருக்குதல் கொடுக்கக் கூடாது என்றும் கூறியிருக்கின்றார்.

வரும் கட்சித் தேர்தல்களில் தனது இளைஞர் பகுதித் தலைவர் பதவியை மோகன் தற்காத்துக் கொள்வார் அல்லது தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து பேராக் மாநில ம.இ.கா புள்ளிகளில் ஒருவரான கே.ஆர்.ஏ.நாயுடு, கூட்டரசுப் பிரதேச மாநகர் மன்ற ஆலோசனை மன்ற உறுப்பினர் மலர்விழி குணசீலன், தெலுக் கெமாங்கில் போட்டியிட்டு தோல்வி கண்ட வி.எஸ்.மோகன் போன்றோரும் பழனிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டிருக்கின்றனர்.

இவர்களெல்லாம், ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட குறி வைத்திருப்பவர்கள் எனக் கருதப்படுகின்றது.

பழனிவேலு மீண்டும் தலைவராக முடியுமா?

ஒருபுறம் நெருக்கடிகள் தொடர்ந்தாலும், பழனிவேலுவுக்கு எதிராக இதுவரை முக்கிய தலைவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என்பதால் பழனிவேலுவுக்கு எதிராக பெரிய அளவில் கட்சியில் எதிர்ப்புகள்  எழ இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது.

காரணம், அடுத்து அமையவிருக்கும் அமைச்சரவை நியமனங்களில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கட்சித் தலைவர்களில் பலர் ஆவலுடன் தற்போது காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சில செனட்டர் நியமனங்களும் தற்போது காலியாக உள்ளன.

பழனிவேலு வகித்த செனட்டர் பதவி, காலமான பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ சுப்பையா வகித்த செனட்டர் பதவி, பேராக் மாநிலத்தில் சட்டமன்ற இடத்தை விட்டுக் கொடுத்ததால் கிடைக்கப் போகும் செனட்டர் பதவி என சில நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு ம.இ.கா புள்ளிகள் பலர் குறி வைத்து பழனிவேலுவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

இது தவிர ம.இ.கா சார்பாக அரசாங்க சார்பு நிறுவனங்களிலும், அரசு சார்ந்த அமைப்புக்களிலும் பல நியமனங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்த பதவிகளுக்கும் பல ம.இ.கா தலைவர்கள் குறி வைத்திருக்கின்றனர்.

இதனால் தற்போதைக்கு எல்லா முக்கிய தலைவர்களும் பழனிவேலுவைத் தற்காத்து வருவார்கள் என்பதோடு, இந்த நியமனங்களில் ஏதாவது தங்களுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் காயை நகர்த்தி வருவார்கள்.

இந்த பதவி நியமனங்கள் அனைத்தையும் செய்து முடித்து விட்டு, அதன் மூலம் கட்சியில் தனது ஆதரவாளர்கள் பலரையும் முக்கிய கட்சித் பதவிகளிலும், அரசாங்கப் பதவிகளிலும் நியமித்து விட்டு – கட்சியின் தனக்கான அடித்தளத்தை பலமாக நிர்மாணித்து விட்டு அதன் பின்னர்தான் பழனிவேல் தேசியத் தலைவருக்கான தேர்தலை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசியத் தலைவர் தேர்தல் எப்போது? போட்டியிருக்குமா?

ம.இ.கா. தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டவுடன்தான் உண்மையிலேயே யாராவது பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிடுவார்களா என்பது தெரிய வரும்.

இன்றைய மலேசிய நண்பன் நாளிதழில் தேசியத் தலைவர் தேர்தலில் பழனிவேலுவை எதிர்க்க ஒரு வேட்பாளர் தயார் என்ற ஆரூடம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இருப்பினும், தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 300க்கும்  மேற்பட்ட கிளைத் தலைவர்களின் ஆதரவைப் பெறவேண்டியிருக்கும் என்பதாலும், போட்டியில் தோல்வியடைந்தால் அதோடு தங்களின் அரசியல் எதிர்காலத்தை ம.இ.காவில் இழக்க வேண்டியிருக்கும் என்பதாலும் முக்கிய தலைவர்கள் யாரும் பலப்பரிட்சையில் இறங்க முன்வர மாட்டார்கள் என்றே கருதப்படுகின்றது.

மாறாக, தங்களின் தற்போதைய பதவிகளையும், கட்சியில் தங்களுக்கிருக்கும் இடங்களையும் மீண்டும் தற்காத்துக் கொள்ளவே அவர்கள் முனைப்பு காட்டுவார்கள்.

-இரா.முத்தரசன்