Home கருத்தாய்வு அஸ்மின் அலி திடீரென போர்க்கொடி தூக்குவது எதனால்? ரபிசி ரம்லி காரணமா?

அஸ்மின் அலி திடீரென போர்க்கொடி தூக்குவது எதனால்? ரபிசி ரம்லி காரணமா?

896
0
SHARE
Ad

Azmin Aliமே 13 – அன்வார் இப்ராகிமின் இணை பிரியா தளபதி என்று அரசியல் வட்டாரத்தில் பெயர் பெற்ற பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி திடீரென கட்சியில் போர்க்கொடி தூக்கியிருப்பதும்,

#TamilSchoolmychoice

கட்சிக்கு எதிராகவும், பிகேஆர் கட்சி சார்ந்திருக்கும் மக்கள் கூட்டணிக்கு எதிராகவும் அறிக்கைகள் விடுத்திருப்பதையும் பார்க்கும்போது பலர்  அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருப்பர்.

காரணம், எல்லா போராட்டக் களங்களிலும் அன்வாரோடு தோளோடு தோள் கொடுத்து நின்ற அஸ்மின், பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே பொங்கியெழுவது எதனால் என்ற கேள்வியும் குழப்பமும் அனைவருக்கும் இயல்பாகவே எழுந்துள்ளது.

அன்வாரின் செயலாளராக அரசியல் வானில் வாழ்க்கையைத் தொடங்கிய அஸ்மின் நாளடைவில் அன்வாரின் அரசியல் வளையத்திற்குள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.

அன்வார் துணைப் பிரதமராக இருந்த போது அவருக்கு செயலாளராக இருந்த அஸ்மின் அலி ஆணவமாக நடந்து கொள்கின்றார் என்ற குற்றச்சாட்டுகளும் அப்போது இருந்தன.

ஆனால், அன்வார் கைது செய்யப்பட்டபோது நிலைமைகள் தலைகீழாக மாறின. அன்வாரின் மனைவி வான் அசிசா தலைமையில் பிகேஆர் கட்சி தொடங்கப்பட்டபோதும், அன்வார் சிறைக்குள் இருந்தபோதும், கட்சி ஆதரவாளர்களை ஒழுங்குபடுத்துவதிலும், ஒற்றுமைப்படுத்துவதிலும், கட்சி நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதிலும் அஸ்மின் அலி முக்கிய பணியாற்றினார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பேராசிரியர் டாக்டர் சைட் ஹூசேன் அலி பதவி விலகிக் கொண்டபோது அவருக்குப் பதிலாக இயல்பாகவே அன்வாருக்கு நெருக்கமானவராக – அடுத்த நிலையில் கட்சியில் இருந்த அஸ்மின் அலி தேசியத் துணைத் தலைவராக உயர்ந்தார்.

அன்வாரின் மற்றொரு செயலாளரும், அவருக்கு வலுவான அரசியல் சகாவாக விளங்கியவருமான எசாம் முகமட் நூர் சில கருத்து வேறுபாடுகளால் அம்னோவுக்கு தாவிவிட, தனது அரசியல் பலத்தை பிகேஆர் கட்சிக்குள் மேலும் வலுவாக ஊன்றிக் கொண்டார் அஸ்மின்.

எசாமுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்தான், எசாம் அம்னோவுக்குத் தாவ காரணமாக அமைந்தது என்றும் பிகேஆர் அரசியல் வட்டாரத்தில் கூறுவார்கள்.

நுருல் இசா, ரபிசி ரம்லி வருகையால் முக்கியத்துவம் இழந்த அஸ்மின்

Nurul Izzah Anwarகட்சியில் துணைத் தலைவராக உயர்ந்தாலும் நாளடைவில் அஸ்மினின் பிரபல்யமும் அரசியல் ஆதிக்கமும் கட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

காரணம், நுருல் இசா, ரபிசி ரம்லியின் வருகை!

அன்வார் இப்ராகிமின் மகள் நுருல் இசா கடந்த பொதுத் தேர்தலில் ஷரிசாட் ஜாலிலைத் தோற்கடித்தது முதல் அவருக்கு கட்சியில் முக்கயத்துவம் ஏற்படத் தொடங்கியது.

அன்வாரின் தூர நோக்கு அரசியல் திட்டங்களையும் அவரது எதிர்காலக் கனவுகளையும் அடுத்த கட்டத்திற்கு ஏந்திச் செல்லக் கூடிய தலைவராக, அன்வாருக்கு பிறகு கட்சியை வழி நடத்தும் தலைவியாக. ஏன் நாட்டின்  அடுத்த  பிரதமராகக் கூட – இப்படி பல கோணங்களில் நுருல் இசா பிகேஆர் கட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

அஸ்மின் அலியின் முக்கியத்துவமும் கட்சியில் குறையத் தொடங்கியது.

அடுத்து வந்த ரபிசி ரம்லி, மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களை மக்கள் மன்றத்திற்கு துணிச்சலோடு கொண்டு வந்து, அவற்றைக் கையாண்ட விதத்தால் நாடு முழுமைக்கும் வெகு சீக்கிரத்திலேயே புகழ் பெற்றார்.

அன்வாரும் பல விவகாரங்களில் ரபிசிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

குறிப்பாக, பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை, மக்கள் கூட்டணியின் மாற்று வரவு செலவுத் திட்டம் போன்ற விவகாரங்களில் ரபிசி தீவிரமாக பணியாற்றினார் என்பதோடு அதில் அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும் வழங்கப்பட்டது.

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து புள்ளி விவரங்களுடன் ஊழல் புகார்களையும், மக்கள் கூட்டணியின் பொருளாதாரத் திட்டங்களையும் அடிக்கடி விளக்கத் தொடங்கிய ரபிசி ரம்லி உடனடியாக மக்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம், துணிச்சல், தெளிவான ஆங்கில உச்சரிப்பு, சிக்கலான பொருளாதார அம்சங்களைக் கூட எளிதாக விளக்கும் திறமை, தலைமைத்துவ ஆற்றல் – இப்படி பல கோணங்களில் ரபிசி மிக குறுகிய காலத்தில் மக்களிடையேயும், மக்கள் கூட்டணி ஆதரவாளர்களிடையேயும் பிரபலமடைந்துவிட்டார்.

மக்கள் கூட்டணியின் அடுத்த கட்ட மலாய்த் தலைவர்களில் ஒருவராக தற்போது மிகுந்த எதிர்பார்ப்போடு ரபிசி ரம்லி பார்க்கப்படுகின்றார்.

இன்றைய நிலையில் நடப்பு மந்திரிபுசார் காலிட் இப்ராகிமிற்கு பதிலாக நாளை சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவியேற்க எல்லா வகையிலும் தகுதி வாய்ந்தவராக ரபிசி தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், முதன் முறையாகப் போட்டியிட்டாலும்,  தேசிய முன்னணி கைவசம் இருந்த பாண்டான் நாடாளுமன்ற தொகுதியை 26,000 வாக்குகள் கூடுதலான பெரும்பான்மையில் வெற்றி வாகை சூடி அரசியலில் தற்போது உச்சத்திற்கு வந்து விட்டார் ரபிசி ரம்லி.

ரபிசியால் அஸ்மினுக்குத் திண்டாட்டம்

Rafizi Ramliபிகேஆர் கட்சியில் அண்மையக் காலங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால், இனிமேல் அஸ்மின் அலிக்கு கட்சியில் முக்கியத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதோடு அவரது அரசியல் ஆதிக்கமும் சரிந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அஸ்மின் அலியின் இடத்தை இனி மிக சுலபமாக ரபிசி நிரப்பி விடுவார் என்ற சூழ்நிலையும் உருவாகிவிட்டது.

அன்வார் குடும்பத்திலிருந்து பிகேஆர் கட்சியை வழிநடத்தும் தகுதியை, மக்களின் அரசியல் ஆதரவை நுருல் இசா ஒரு புறம் பெற்றுவிட்டார் என்றால், இன்னொரு புறத்தில் அன்வார் குடும்பத்திற்கு வெளியே இருந்து சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தலைவராக ரபிசி தற்போது பார்க்கப்படுகின்றார்.

பிகேஆர் கட்சியின் தலைவராக தற்போது வான் அசிசா இருப்பதால் கட்சியின் அடுத்த தேர்தல்கள் நடைபெறும் போது நூருல் இசா கட்சியின் துணைத் தலைவராக வந்தால் அதனால் அது ஒரு குடும்பக் கட்சி என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும்.

எனவே, கட்சியின் துணைத் தலைவராக மற்றொரு முக்கிய தலைவரை – அன்வார் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரை – அடையாளப்படுத்தி முன்னிலைப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிகேஆர் இருக்கின்றது.

அந்த இடத்திற்கு இன்றைய நிலையில் வெகு பொருத்தமானவராக ரபிசி பொருந்தி விட்டார்.

கட்சியில் எந்த பதவி வகித்தாலும் அன்வாரின் அடுத்த வாரிசாகவே நூருல் பார்க்கப்படுவார். அதனால் அவருக்குப் பதவி முக்கியமில்லை.

இந்த சூழ்நிலையில், இனியும் காலம் கடந்தால் பிகேஆர் அரசியலில் தான் காணாமல் போய்விடுவோம் என்ற காரணத்தால்தான், இவ்வளவு நாளாக அமைதி காத்த அஸ்மின் அலி இப்போது கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பத்தொடங்கியிருக்கின்றார்.

கட்சியில் தனக்கும் வலிமை இருக்கின்றது என்று காட்டுவதும், தான் கட்சியை விட்டு விலகினால் அதனால் சில சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன்னோடு கட்சியை விட்டு விலகுவார்கள் என்ற தோரணையைக் காட்டுவதும்தான் அஸ்மினின் குறிக்கோள்.

அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

அஸ்மினின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

அஸ்மின் அலியின் இந்த திடீர் அரசியல் மாற்றத்திற்கு, அவரது சகோதரியும் அம்னோவுக்கு நெருக்கமானவருமான உம்மி அபில்டா தரப்பிலிருந்தும்  நெருக்குதல் தரப்பட்டிருக்கலாம் என்ற ஆரூடங்களும் கூறப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையமும் தேசிய முன்னணியும் பொதுத் தேர்தலில் ஏமாற்றி விட்டனர் என நாடு முழுமையிலும் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்ட அன்வார் புறப்பட்டுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில் அஸ்மின் அலியின் முடிவும் போக்கும், மக்கள் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்பதோடு, அம்னோவுக்கு சாதகமாகவும் இருக்கும்.

இந்த தருணத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினால்தான் தனக்கு பிகேஆர் கட்சியில் அரசியல் எதிர்காலம் இனி இருக்கும் என்றும் அஸ்மின் அலி கணக்குப் போட்டிருக்கலாம்.

Khalid Ibrahimஅடுத்து வரும் கட்சிப் பொதுத் தேர்தல்களில் தான் மீண்டும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட – இனியும் தான் கட்சியில் ஓரங்கட்டப்படாமல் இருக்க – இதுதான் சிறந்த வழி என அஸ்மின் அலி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பிரச்சனையைக் கையில் எடுத்திருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், அவர்  எடுத்த நடவடிக்கைகளால், கட்சியில் அவர் மீது வெறுப்புணர்வும், எதிர்ப்புணர்வும் எழுந்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

தனது சிறந்த தலைமைத்துவத்தால் பிகேஆர் கட்சிக்கு பொதுமக்களிடத்தில் மதிப்பை ஏற்படுத்தித் தந்து, மீண்டும் மக்கள் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய டான்ஸ்ரீ காலிட்இப்ராகிமிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காரணத்தால் பொதுமக்களிடத்திலும் அஸ்மின் அலிக்கு மரியாதை குறைந்திருக்கின்றது.

அதே சமயத்தில், அஸ்மின் அலி இந்த தருணத்தில் கட்சியை விட்டு விலகினால், அவரை வாரியணைத்துக் கொள்ள – அவருக்கு வேண்டிய “சகல ஏற்பாடுகளையும்” செய்து கொடுக்க அம்னோவும் தேசிய முன்னணியும் உற்சாகமாக முன்வரும்.

காரணம், பொதுத் தேர்தலில் ஏமாற்றினார்கள் – முறைகேடுகள் நடந்தன –  என்ற குறைகூறல்களோடு மக்கள் கூட்டணி தலைவர்கள் நாடு தழுவிய போராட்டத்தை மேற்கொண்டுவரும் இந்த வேளையில் –  அந்த போராட்டத்தைத் திசை திருப்பும் வகையில் – அஸ்மின் அலியை பிகேஆர் கட்சியிலிருந்து எப்பாடு பட்டாவது பிரித்தெடுப்பது அம்னோவுக்கு பெரிய வெற்றியாக அமையும்.

எனவே,

அஸ்மின் அலி இப்போது பிகேஆர் கட்சிக்குள்ளேயே போர்க்கொடி தூக்கியிருப்பது, ரபிசி ரம்லி, நுருல் இசா இவர்களை விட நான்தான் முக்கியமானவன் என்பதைக் காட்டவா?

அல்லது,

பிகேஆர் கட்சியின் அடுத்த தேர்தல்களில் தான் மீண்டும் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் என்ற மறைமுக அச்சுறுத்தல் விடுப்பதுதான் அவரது நோக்கமா?

அல்லது,

இதோ வரத் தயாராக இருக்கின்றேன் – ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள் என அம்னோவுக்கு விடுத்துள்ள மறைமுக அழைப்பா? போட்டிருக்கும் அச்சாரமா?

காலம்தான் பதில் சொல்லும்!

-இரா.முத்தரசன்