Home கருத்தாய்வு நேற்று நாடு கடந்த வாழ்க்கை! இன்று துணையமைச்சர்! – வேதமூர்த்தியின் விஸ்வரூபம்! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கு...

நேற்று நாடு கடந்த வாழ்க்கை! இன்று துணையமைச்சர்! – வேதமூர்த்தியின் விஸ்வரூபம்! எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கு பிடிப்பாரா?

1023
0
SHARE
Ad

waythamoorthyமே 20 – குறை கூறல்கள் ஆயிரம் இருக்கலாம். சோரம் போய் விட்டார், துரோகம் இழைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குவியலாம்.

#TamilSchoolmychoice

அரசியல் சந்தர்ப்பவாதி என்றும், “புதிய மண்டோர்” என்றும் சொந்த சகோதரனே சகதி வாரி இறைக்கலாம்.

சமூகப் போராளி என்ற போர்வையில் – மக்களுக்கான போராட்டம் என்ற முகமூடி அணிந்து கொண்டு, அரசியல் காய்களை நகர்த்திய அரசியல் சூத்திரதாரி என்றும் சிலர் இகழ்ந்து கூறலாம்.

“உங்களுக்காக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றேன். பணம் வாங்கிக் கொடுக்கின்றேன்” என்று மக்களை தவறான பாதைக்கு – வீதிப் போராட்டத்துக்கு இழுத்துச் சென்று ஏமாற்றியவர் – விலை போனவர் என ஊர் முழுக்க இகழலாம்.

ஆனால்,  சார்பு இன்றி நடுநிலை நோக்கோடு பார்த்தால், ஹிண்ட்ராப்பின் ஒரு பிரிவின் தலைவர் பி.வேதமூர்த்தி மலேசிய அரசியலில் இதுவரை எந்தவொரு இந்தியரும் சாதிக்க முடியாத ஒன்றை சாதித்து விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராமல், ஓர் இயக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதுவும் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்தை வைத்துக் கொண்டு, இதுவரை யாரும் பின்பற்றாத ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து விடாப்பிடியாக இன்று துணையமைச்சர் பதவியையும் அடைந்து விட்டார்.

இதுவரை இல்லாத புதிய வழியில் துணையமைச்சர் பதவி

இன்றைக்கு அவர் மீது ஆயிரம் குறை கூறல்கள் இருக்கலாம்.

ஆனால் அன்று, பிரிட்டனில் நாடு கடந்த வாழ்க்கை வாழ்ந்த வேதமூர்த்தியின் அன்றைய போராட்டத்தின் முக்கியத்துவத்தை, மதிப்பை யாரும் குறைத்துக் கூறவும் முடியாது; குறை சொல்லவும் முடியாது.

2007ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் பேரணிக்குப் பின்னர், ஹிண்ட்ராப்பின் தூண்களாக விளங்கிய ஐந்து தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பலம் பொருந்திய அமைப்பாக உருவாகி வந்த ஹிண்ட்ராப் உருக்குலைந்து நின்ற ஒரு காலகட்டம்!

உள்நாட்டில், ஹிண்ட்ராப்பின் போராட்டங்களை இன்றைய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன் முன்னெடுத்துச் செல்ல முன்வந்து பாடுபட்டார்.

ஆனால், ஹிண்ட்ராப்பின் போராட்டத்தையும், மலேசிய இந்தியர்களின் அவல நிலையையும் வெளிநாடுகளுக்கும், ஐக்கிய நாட்டு சபைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, வேதமூர்த்தியோ நாட்டை விட்டு வெளியேறினார்.

குடும்பத்தைப் பிரிந்து, ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனில் அரசியல் அடைக்கலம் கோரி வாழ்ந்தாலும் அந்த கால கட்டத்தில் மலேசியாவில் நிகழ்ந்த கடந்த மனித உரிமை மீறல்களை – மலேசிய இந்தியர்களின் அவலங்களை – உலக அரங்குகள் பலவற்றின் பார்வைக்கு கொண்டு சென்றார்.

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பிரிவுக்கு பல அறிக்கைகள் Waytha-UNசமர்ப்பித்தார்.

இன்றைக்கு நமது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்ச்சி, அரசியல் மாற்றங்கள், தேசிய முன்னணி இந்தியர்களை இன்றைக்கு அரவணைத்துச் செல்லும் விதம் – அச்சமின்றி நடத்தப்படும் அரசியல், சமுதாயப் பேரணிகள் இப்படி எல்லாவற்றுக்கும் வித்திட்டதும், அரசாங்கத்தின் விழிகளைத் திறந்து வைத்ததும் அன்றைய ஹிண்ட்ராப் போராட்டத் தலைவர்கள்தான் என்பதையும், அதில் வேதமூர்த்தியும் ஒரு முக்கிய பங்காற்றினார் என்பதையும் யாரும் சரித்திரப் பதிவிலிருந்து அகற்றிவிட முடியாது.

அவரது நடவடிக்கைகளால் மீண்டும் மலேசியா திரும்ப முடியாத அளவுக்கு அவரது அனைத்துலக கடப்பிதழ் முடக்கப்பட்டது.

வெளிநாடுகளில் அவர் மலேசிய அரசாங்கத்தைப் பற்றி தரக் குறைவாக பேசியதும், இந்தியர்களின் நிலை பற்றி சில தகவல்களைக் கூடுதலாக இட்டுக் கட்டி கூறியதும் மலேசியா மீது பற்று கொண்ட இந்தியர்களுக்குக் கூட அப்போதும், இப்போதும்  உடன்பாடு இல்லை.

நாட்டுக்கு எதிராக வேதமூர்த்தி கொட்டி வைத்த அந்த விமர்சனங்கள்தான் இன்று திரும்பி வந்து அவருக்கே எதிராக வரிசை கட்டி நிற்கின்றன.

அப்படியெல்லாம் பேசியவருக்கு எப்படி கொடுக்கலாம் அமைச்சர் பதவி என்ற கண்டனக் குரல்கள் நாடு முழுமையிலும் நாள்தோறும் புறப்பட்டு வருகின்றன.

நாடு கடந்த வாழ்க்கை முடிந்து வீடு திரும்பினார்

நாடு கடந்த வாழ்க்கை நான்காண்டுகளைக் கடந்தபோது, நாடு திரும்பினால், தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்தாலும், துணிந்து நாடு திரும்பினார்.

அவர் மீது எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காதபோதே, அவருக்கும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையில் உடன்பாடு ஒன்று உருவாகியுள்ளது என்ற ஆரூடங்கள் எழுந்தன.

அதன் பின்னர், அவர் ஐந்தாண்டு திட்டம் என்று ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு இதனை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் எங்களின் ஆதரவு என்று கூறிய போது யாரும் அவரை ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை.

பின்னர் அவர், சர்ச்சைக்குரிய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

உண்ணாவிரதம் 21 நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்த “நிலையிலும்” அவர் புத்ரா ஜெயா சென்று பிரதமரைச் சந்தித்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இன்றுவரை அந்த கூட்டத்தில் பேசப்பட்டவை என்ன என்பது அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதால் மக்களுக்கு வேதமூர்த்தியின் நோக்கம் – இலக்கு – நடவடிக்கைகள் மீது சந்தேகம் இருந்தன.

முன்கூட்டியே பேசப்பட்டு, திட்டமிடப்பட்டுவிட்ட வியூகங்கள், ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேற்றம் காண்கின்றதோ என்ற ஐயமும் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

அந்த பேச்சு வார்த்தைகளின் ஒரு அங்கம்தான் – பேரம்தான் – இப்போது கிடைத்திருக்கும் துணையமைச்சர் பதவியோ என்ற குறைகூறல்களும் இப்போது எழுந்துள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Waytha-PM-MOUபிரதமருடனான ஒரே சந்திப்பிற்கு பின்னர், பிரதமரே இறங்கி வந்து வேதமூர்த்தி குழுவினர் சமர்ப்பித்த ஐந்தாண்டு திட்டத்தின் 4 அம்சங்களை ஏற்றுக் கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய முன்னணி சார்பாக அதன் தலைமைச் செயலாளர் துங்கு அட்னானை கையெழுத்திட வைத்தார்.

இதுவும் பின்னணியில் பல திரைமறைவு நாடகங்கள் – பேச்சு வார்த்தைகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பதை சொல்லாமல் சொல்லியது.

இருப்பினும் ஒரு நாட்டு பிரதமரை, எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி தனது சபைக்கு இழுத்து வந்து கையெழுத்திட வைத்ததும் வேதமூர்த்தியின் சாதனை என்றுதான் கூற வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட உடனேயே, அந்த கூட்டத்திலேயே வேதமூர்த்தியும் இந்தியர்கள் தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டும் என்றும் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இதுவும் அனைவருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறும் கண் துடைப்பா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காணப்பட்ட அம்சங்களும் புதியவை அல்ல!

அவை, காலம் காலமாக ம.இ.கா, இந்தியர்களுக்காக போராடி வந்த அம்சங்கள்தான் என்பதும் அவற்றை முறையாக செயல்படுத்தாததே இதே தேசிய முன்னணி அரசாங்கம்தான் என்பதும் நீண்ட கால அரசியலில் இருப்பவர்களுக்குப் புரியும்.

இப்போது அதே தேசிய முன்னணி அரசாங்கம்தான் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்கிறோம் என்று கையெழுத்திட்டுள்ளது.

அன்வார் இப்ராகிமும் இந்த தருணத்தில், ஒரு பேட்டியில் “வேதமூர்த்தி எங்களிடம் கொடுத்த கோரிக்கைகள் வேறு. தேசிய முன்னணியிடம் கொடுத்த கோரிக்கைகள் வேறு. தேசிய முன்னணியிடம் கொடுத்த கோரிக்கைகளை எங்கள் முன் வைத்திருந்தால், ஆயிரம் முறை அதில் கையெழுத்திட்டிருப்போம்” என்று தெளிவாக எடுத்துக் கூறினார்.

வேதமூர்த்தியால் இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பின.

தேசிய முன்னணி பக்கம் வேதமூர்த்தி சாய்ந்தது, இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து – இப்படி எதுவுமே இந்தியர் வாக்குகளை 13வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பக்கம் திசை திருப்பவில்லை என்பதுதான் உண்மை நிலை.

அதைவிட முக்கியமாக வேதமூர்த்தியின் நிலைப்பாட்டால் ஆத்திரம் கொண்ட இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதுதான் ஆய்வுகளும், மக்கள் சந்திப்புக்களும் நமக்கு எடுத்துக் காட்டும் உண்மைகள்.

வேதமூர்த்தி பிரச்சாரத்திற்கு சென்றபோதுகூட அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்வுகளிலும், சலசலப்புகள் ஏற்படும், எதிர்ப்புக் குரல்கள் கிளம்பும், ம.இ.காவினரின் புறக்கணிப்புகள் இருக்கும் என்பதும் இப்போதே தெளிவாகத் தெரிகின்றது.

இப்படி பல்வேறு முனைகளிலும் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு பயன்தராத – பின்னடைவை ஏற்படுத்தும் – ஒரு நியமனத்தை பிரதமர் ஏன் செய்தார் என்பதுதான் இந்திய சமுதாயத்தில் இப்போது எழுந்திருக்கும் கேள்வி!

பிரதமரின் நோக்கம் என்ன?

Najib-2---Sliderபிரதமரின் நோக்கம் ஒன்றேதான்!

ஹிண்ட்ராப் என்ற இயக்கம் பலம் பொருந்திய – ஒற்றுமை கொண்ட – இந்தியர்களை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பாக உருவெடுக்க விட்டுவிடக் கூடாது – ஹிண்ட்ராப்பின் போராட்டக் குரல்கள் இனி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பக்கூடாது!

அதற்காக பிரதமர் நஜிப் கொடுத்திருக்கும் விலைதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், இதோ இப்போது வேதமூர்த்திக்கு கொடுத்திருக்கும் துணையமைச்சர் பதவியும்!

அதன்மூலம், ஹிண்ட்ராப்பின் நெருப்புக் கொள்கைகளை துணையமைச்சர் பதவி என்னும் நீர் ஊற்றி பிரதமர் அணைத்து விட்டார்.

இனி, சங்கப் பதிவு இலாகாவின் உதவியோடு ஹிண்ட்ராப் இயக்கம் வேதமூர்த்தியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் – இயங்கும்.

அவரது சகோதரர் உதயகுமார் குழுவினர் ஹிண்ட்ராப் இயக்கத்தில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஹிண்ட்ராப் இனி தேசிய முன்னணி அரசாங்கத்தின் கைப்பொம்மையாக மாறும்.

இந்த நோக்கத்தில் காய்களை நகர்த்திய பிரதமர் இந்திய சமுதாயத்தை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி தனது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்த அரசியல் சதுரங்க விளையாட்டில் இரண்டு சகோதரர்களின் சகோதரத்துவமும் பலியாகிப் போனதுதான் ஒரு சோகம்!

இதனால் இந்திய சமுதாயம் மேலும் பிளவுபட்டது – தனது போராட்டக் குரலை முடக்கிக்கொண்டது என்பதுதான் எதிர்கால சரித்திரம் எழுதப்போகும் பாடம்.

மலேசிய அரசியலில் புதிய திருப்பம் என்னவென்றால், இப்போது வேதமூர்த்திக்கு எதிரான போராட்டத்தை ம.இ.கா.வே துணிந்து கையிலெடுத்துக் கொண்டுவிட்டது.

பிரதமரே செய்த நியமனம் என்றாலும் வேதமூர்த்திக்கு எதிரான ம.இ.கா தலைவர்களின் கண்டனக் குரல்கள் தொடர்கின்றன.

இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோதே தனது கண்டனத்தை பதிவு செய்யாத ம.இ.கா – அந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த ம.இ.கா தலைவர்கள் – அதன் பின்விளைவுகளை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ம.இ.கா.வின் புறக்கணிப்பு ஒரு புறம் – இந்தியர்களின் உணர்வு பூர்வமான எதிர்ப்பு இன்னொரு புறம் – என்ற நிலையில், வேதமூர்த்தி துணையமைச்சர் பதவியில் இருந்து கொண்டு உருப்படியாக செயல்பட முடியாத சூழ்நிலைதான் இனிமேல் உருவாகும் என்பதோடு,

பிரதமரின் இந்த நியமனம் தவறான ஒன்று என்பதையும் காலம் நிரூபிக்கும்.

-இரா.முத்தரசன்