புதுடெல்லி, மே 21- இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்.
27 வயது நடுத்தர எடை வீரரான விஜேந்தர்சிங் பீஜிங் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2009–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் விஜேந்தர்சிங் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார். பஞ்சாப் போலீசிடம் சிக்கிய போதை பொருள் விற்பனையாளர் அனுப் சிங், விஜேந்தர்சிங்குக்கு போதை பொருள் அளித்ததாக வாக்குமூலம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து போலீசாரின் சோதனைக்கு உட்பட மறுத்த விஜேந்தர்சிங், மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படி தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் பரிசோதனைக்கு சம்மதித்தார்.
இதில் நடத்தப்பட்ட பரிசோதனையில் விஜேந்தர்சிங் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து விஜேந்தர்சிங் மீண்டும் குத்துச்சண்டை பயிற்சிக்கு திரும்பி இருக்கிறார்.
இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
எனக்கு ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன். நான் பயிற்சியை தொடங்கி விட்டேன். அக்டோபர் மாதம் நடக்கும் உலக போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன்.
பிரச்சினைக்குரிய நேரத்தில் எனக்கு நம்பிக்கை அளித்த அரியானா அரசு, மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது தான் பயிற்சிக்கு திரும்பி இருக்கிறேன். இதை விட சிறந்தது எனக்கு எதுவும் இல்லை.
கடவுள் எதை செய்தாலும் அது நன்மைக்கே என்று நம்புபவன் நான். இந்த விஷயத்தில் கடவுள் எனக்கு நல்லதை செய்து இருக்கிறார். எல்லா சம்பவங்களிலும் நமக்கு ஒரு பாடம் கிடைக்கும்.
இந்த விஷயத்தின் மூலம் எனது நல்ல நண்பர்கள் யார் என்பதை என்னால் புரிய முடிந்தது. நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. இனிமேல் எனது கார் மற்றும் செல்போனை யாருக்கும் எளிதில் கொடுக்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.