Home நாடு கெடா ‘கறுப்பு 505’ பேரணி: அடாம் அட்லியை விடுதலை செய்ய வேண்டும் என பெருங்குரல்

கெடா ‘கறுப்பு 505’ பேரணி: அடாம் அட்லியை விடுதலை செய்ய வேண்டும் என பெருங்குரல்

568
0
SHARE
Ad

kedah black out

கெடா, மே 22 – கெடா மாநிலத்தில் நேற்று இரவு மக்கள் கூட்டணியின் 7 வது தேசிய அளவிலான ‘கறுப்பு 505’ பேரணி நடந்தேறியது. இது 30,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

அப்பேரணியில் மாணவப் போராளி அடாம் அட்லி கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும், உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடியின் ஆணவம் நிறைந்த அறிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் உரையாற்றினர்.

#TamilSchoolmychoice

கோத்தா சாராங் செமுட்டில் உள்ள பாஸ் தலைமையகத்துக்கு முன் கூடிய மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் அனைவரும் மாணவர் அடாம் அட்லிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விளக்குகளை கையில் வைத்திருந்தனர். அதோடு ‘அடாம் அட்லியை உடனடியாக விடுதலை செய்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான அடாம் அட்லி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக மே 13 ஆம் தேதி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

அடாம் அட்லி விடுதலை செய்யப்பட வேண்டும்

நேற்றைய பேரணியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், உதவித்தலைவர் என்.சுரேந்திரன் மற்றும் ஸ்ரீகண்டி தலைவர் சிட்டி ஆயிஷா சேக் இஸ்மாயில் ஆகியோர் மாணவர் அடாம் அட்லியை தேச நிந்தனைச் சட்டத்தில் கைது செய்துள்ள தேசிய முன்னணி அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

“நமது தேசத்தைக் காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், தேர்தலில் முறைகேடுகள் செய்யவேண்டாம் என்று கூறிய அடாம் அட்லியை கைது செய்துள்ளனர்.

இது இளைய தலைமுறையினரின் எழுச்சி. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். ஆனால் தேசிய முன்னணி அரசாங்கம் அடாம் அட்லியை கைது செய்வதன் மூலம் மற்றவர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளது” என்று அன்வார் கூறினார்.

நேற்று இரவு கோலாலம்பூர், மலாக்கா, பத்து பகாட் ஆகிய இடங்களிலும் அடாம் அட்லிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தேர்தல் முறைகேடுகளால் வெற்றி பெற்ற தேசிய முன்னணி

13 ஆவது பொதுத்தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் மக்கள் கூட்டணி நிச்சயம் புத்ர ஜெயாவைக் கைப்பற்றி இருக்கும். ஆனால் பங்களாதேஷ் போன்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை வாக்களிக்க வைத்து, தேர்தலில் பல குளறுபடிகளை செய்து தான் தேசிய முன்னணியால் வெற்றி பெற முடிந்தது என்று அன்வார் கூறினார்.

“உண்மையில் பக்காத்தான் தான் இத்தேர்தலில் வெற்றிபெற்றது. எங்களுடைய வெற்றியை நாங்கள் திரும்பப் பெறும் வரைப் போராடுவோம். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தது, அழியா மை அழிந்த விவகாரம் போன்ற முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து போராடுவோம்” என்றும் அன்வார் உரையாற்றினார்.