Home அரசியல் தம்ரின் கபார், ஹாரிஸ் இப்ராகிம், தியான் சுவா மீண்டும் கைது!

தம்ரின் கபார், ஹாரிஸ் இப்ராகிம், தியான் சுவா மீண்டும் கைது!

483
0
SHARE
Ad

Tamrin,-Tian-Chua,-Harrisகோலாலம்பூர், மே 28 – (கூடுதல் தகவல்களுடன்) முன்னாள் துணைப் பிரதமர் கபார் பாபாவின் மகனும், பாஸ் கட்சியைச் சேர்ந்தவருமான தம்ரின் கபாரும், அரசியல் போராட்டவாதி ஹாரிஸ் இப்ராகிமும் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது ட்விட்டர் செய்தித் தளத்தில் இந்த தகவலை கோபிந்த் சிங் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்னர் இந்த இருவரும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவுடன் கைது செய்யப்பட்டு, தேச நிந்தனை சட்டம், மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் காவலில் வைக்க காவல் துறையினர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பதும் ஆனால் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அவர்களை விடுதலை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இருவரும் டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டர் செய்தியின் படி, மாணவர் போராட்டவாதி முகமட் சப்வான் என்பவரும் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை அவரது மனைவியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“உண்மையான நிலவரம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. நாங்கள் இப்போது அங்கே சென்று கொண்டிருக்கின்றோம்” என்று கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

மாலை 7.15 மணியளவில் அம்பாங்கிலுள்ள தம்ரின் கபார் இல்லத்திற்கு காவல் துறையினர் சென்று அவரைக் கைது செய்து டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நாடு முழுமையிலும் இவ்வாறு செய்து வரப்படும் தொடர் கைது நடவடிக்கைகள், மக்கள் கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறை என மக்கள் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் முன்பு கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட தியான் சுவா இதுவரை கைது செய்யப்படவில்லை என முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது அவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.