சென்னை, பிப்ரவரி 2 – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது கேயார் தரப்பு கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி நடந்த போட்டி பொதுக்குழுவில் பதிவான 215 வாக்குகள் 11-ஆவது சிட்டி சிவில் கோர்ட்டில் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அதில் கேயார் தரப்புக்கு 210 வாக்குகள் கிடைத்துள்ளதால், எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு முறைப்படி நடந்த தேர்தலில் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பி.எல். தேனப்பனும், பொருளாளராக கலைப்புலி தாணுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிர்வாகக் குழு தங்களின் சுயநலனுக்காக தயாரிப்பாளர் சங்கத்தை பயன்படுத்துவதாக கூறி போட்டி பொதுக் குழுவை கேயார் தரப்பு கூட்டியது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாக்களித்தனர்.
அந்த வாக்குகள் 11-ஆவது சிட்டி சிவில் கோர்ட் நீதிபதி குமணன் கண்காணிப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் சனிக்கிழமை எண்ணப்பட்டது.
இது குறித்து கேயார் கூறுகையில், “” எஸ்.ஏ.சந்திரசேகரன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர் தலைமையிலான நிர்வாகக் குழு உடனே பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நாங்களே அவர்களை வெளியேற்றுவோம்” என்றார்