கோலாலம்பூர், ஜூன் 4 – சட்டத்திற்குப் புறம்பாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் கறுப்பு 505 பேரணி நடத்தியதற்காக, எதிர்கட்சியைச் சேர்ந்த பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் நாளை பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரணி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அமைதிப் பேரணி 2012 சட்டம் 9(1) என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘செகுபார்ட்’ என்று அழைக்கப்படும் Solidariti Anak Muda Malaysia (SAMM) என்ற அமைப்பின் தலைவரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், சட்டத்திற்குப் புறம்பாக கடந்த மே 25 ஆம் தேதி பாடாங் தீமோர் திடலில் இப்பேரணியை நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 70,000 த்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அப்பேரணியில் பல அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொண்டதோடு, நள்ளிரவு வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து செகுபார்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நஜிப் மற்றும் மகாதீர் விரித்த வலையில் உள்துறை அமைச்சர் சாகிட் வசமாக மாட்டிக்கொண்டார். எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் சாகிட்டை அழிக்கும் நோக்கில் தான் அவர்கள் இது போன்ற வலையை விரித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு தன்னை தேடி காவல்துறையினர் தனது வீட்டிற்கும், தனது தாயார் வீட்டிற்கும் வந்ததாகவும் செகுபார்ட் தெரிவித்துள்ளார்.