ஜூன் 13 – பழைய தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது, அதில் ‘சார் தந்தி!” என தபால்காரர் அழைப்பது போன்றோ,‘சார் உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கின்றது’ என யாராவது ஒருவர் சொல்வது போன்றோ காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
ஆனால், இனிமேல் அப்படிப்பட்ட காட்சிகளுக்கே இடம் இருக்காது. காரணம், தகவல் யுகப் புரட்சியின் காரணமாக, இணைய அஞ்சல், கைத்தொலைபேசி வழி குறுந்தகவல் என பல வகைகளில் செய்திகளின் பரிமாற்றம் புதிய பரிணாம வளர்ச்சிகளை அடைந்துவிட்ட நிலையில், தந்தி சேவைகளை இந்தியாவில் ஜூலை 15 முதல் நிறுத்தப்படப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 1850ஆம் ஆண்டில் தந்தி சேவை தொடங்கப்பட்டது.
தற்போது பிஎஸ்என்எல் எனப்படும் இந்திய அரசின் நிறுவனத்தின் கீழ் தந்தி சேவைகள் நடைபெற்று வருகின்றன.
யாருக்காவது தந்தி அனுப்ப வேண்டியிருந்தால் அதனை அனுப்ப வேண்டிய இறுதிநாளும் ஜூலை 15தான். அதன்பிறகு, இந்த சேவைகள் முற்றாக நிறுத்தப்படும்.
நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் ஆக்கிரமிப்பதற்கு முன்னால் மக்கள் தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் தகவல் தொடர்பு தளமாக தந்திதான் இருந்து வந்தது.
திருமண வாழ்த்துகளை தந்தி வாயிலாக அனுப்புவதும் ஒரு நடைமுறையாக ஒருகாலத்தில் இருந்து வந்தது.
மரணச் செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு அன்றைய மக்களுக்கு இருந்த ஒரே வசதி தந்திதான். காரணம், இந்தியாவின் பல இடங்களில் தொலைபேசி வசதிகள் அப்போதைக்கு இல்லாமல் இருந்தன.
இன்றைக்கு நிலைமைகள் எல்லாம் மாறி, தந்தியின் முக்கியத்துவத்தை மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ள, அதனால் தற்போது தந்தி சேவையே முற்றாக நிறுத்தப்படவிருக்கின்றது.
.