பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13 – மஇகா கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து மூத்த உறுப்பினர்கள் மூவரை, அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீக்கியுள்ளார்.
அவர்கள் மஇகா வின் முன்னாள் துணைத்தலைவர் எஸ்.வீரசிங்கம், முன்னாள் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் டி.மாரிமுத்து மற்றும் முன்னாள் பேராக் மாநில மஇகா தலைவர் ஜி.ராஜூ ஆகியோர் ஆவர்.
இந்த மூன்று மூத்த உறுப்பினர்களுக்குப் பதிலாக, ஜோகூர் மாநிலம் காஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்யாநாதன், மலாக்கா மாநிலம் காடெக் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மகாதேவன் மற்றும் நெகிரி செம்பிலான் ஜெரம் பாடாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எல்.மாணிக்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வித்யாநாதன் ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவில் ஒற்றுமை மற்றும் மனித வளத் துறையிலும், மகாதேவன் மலாக்கா மாநில ஆட்சிக்குழுவில் நிறுவன விவகாரங்கள், மனித வளம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் துறையிலும், மாணிக்கம் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் மனித வளம், தோட்டங்கள் மற்றும் புதிய கிராமங்கள் துறையிலும் பொறுப்பு வகிக்கின்றனர்.
நீக்கப்பட்ட மூத்த உறுப்பினர்களான வீரசிங்கம், மாரிமுத்து மற்றும் ராஜூஆகியோர், கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய மஇகா தலைவர் எஸ்.சாமிவேலுவால் மத்திய செயற் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி மஇகா பொது செயலாளர் ஏ.சக்திவேல் கூறுகையில், “கட்சித் தலைவரது முடிவின் படி, நேற்று மத்திய செயற் குழுவில் புதிதாக 3 உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். கட்சி விதிகளின் படி மத்திய செயற் குழுவில் 9 உறுப்பினர்கள் வரை பழனிவேலால் நியமிக்க முடியும்.இம்மூவரையும் தலைவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவர்கள் புதியவர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்குச் சமமானவர்கள் ” என்று தெரிவித்துள்ளார்.