Home அரசியல் ‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’

‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’

644
0
SHARE
Ad

1mpspகோலாலம்பூர்,பிப்.4விளக்குக் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துகூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதாகைகளை அகற்றிய ஊராட்சி மன்ற  ஊழியர்களைக் கண்டித்த சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கடுமையாக சாடப்பட்டார்.

ஊழியர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்.  அவர்களைக் கண்டித்தது “சட்டத்தை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும் செயலாகும்”என்று செபறாங் பிறை முனிசிபல் மன்ற (எம்பிஎஸ்பி) கவுன்சிலர் ஸ்டீபன் சிம் கூறினார்.

சிம்மைத் தொடர்புகொண்டு பேசியபோது, “சட்டங்களை மதிக்க வேண்டும் என்பது அமைச்சரான இங்-குக்குத் தெரிந்திருக்க வேண்டும். பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?”, என்றவர் வினவினார்.

#TamilSchoolmychoice

“பிரதமரின் உருவப்படத்தைக் கொண்ட அப் பதாகைகளை எம்பிஎஸ்பி அகற்றியது. ஏனென்றால் அவற்றுக்கு ஊராட்சி மன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை”, என்று பினாங்கு டிஏபி விளம்பரப் பிரிவுச் செயலாளருமான சிம் கூறினார்.

“ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்தது தவறு என்று இங் கூறுகிறாரா? எம்பிஎஸ்பி-இன் அதிகாரப்பூர்வ பணியைக் கண்டித்ததற்காக இங் எம்பிஎஸ்பி-இடமும் அதன் ஊழியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்”, என்றாரவர்.

பிஎன் அல்லது நஜிப் சம்பந்தப்படாத மற்ற சட்டவிரோத பதாகைகளும் அகற்றப்பட்டதாக சிம் தெரிவித்தார்.

எம்பிஎஸ்பி ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணியைச் செய்துகொண்டிருந்தபோதுதான் பிஎன் சட்டவிரோதமாக தொங்க விட்டிருந்த இந்தப் பதாகைகளைக் கண்டார்கள்.

அன்றைய தினம் மொத்தம் 971 பதாகைகள் அகற்றப்பட்டன. அவற்றில் 678-இல் நஜிப்பின் உருவப் படம் இருந்தது என்றாரவர்.

பதாகைகள் அகற்றப்பட்டது பற்றி ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்த இங், அது மாநில அரசாங்கத்தின் தகுதிக்கு உகந்த செயல் அல்ல என்றார்.

கம்பங்களிலிருந்து இறக்கப்பட்டு தரையில் கிடந்த அப்பதாகைகளைச் சிலர் மிதித்துகொண்டு சென்றதாகவும் தம்மிடம் கூறப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

பிரதமரின் உருவப்படத்தை மிதித்தது மலேசியாவை மிதிப்பதற்கு ஒப்பாகும் என்பதால்  மலேசியப் பிரதமரிடம், “மரியாதைக்குறைவாக நடந்துகொண்ட செயலுக்காக” பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இங் (வலம்) கோரினார்.

இதற்குப் பதிலடி கொடுப்பதுபோல் சிம், அனுமதியின்றி பதாகைகளைத் தொங்க விட்டதன் மூலமாக மாநில பிஎன் சட்டத்தை மீறியுள்ளது என்றும் அந்த “வெட்கக்கேடான விசயத்தைக் கமுக்கமாக வைத்துக்கொண்ட” எம்பிஎஸ்பிக்கு இங்கும் மசீசவும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இரட்டை நியாயம் பேசுவதே” பிஎன்னின் வழக்கம் என்றும் சிம் சாடினார்.

பினாங்கில், பக்காத்தான் தலைமையில் செயல்படும் மாநில அரசும் ஊராட்சி மன்றங்களும் திறமை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை கோட்பாட்டின்படி செயல்படுவதை அவர் இங்குக்கு நினைவுப்படுத்தினார்.

“அமைச்சரோ பிரதமரோ யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றாரவர்.