Home இந்தியா டெல்லியில் அத்வானியுடன் மோடி சந்திப்பு

டெல்லியில் அத்வானியுடன் மோடி சந்திப்பு

590
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 18- பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சமீபத்தில் கோவாவில் நடந்தபோது, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி தேர்தல் பிரசாரக் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார். பிறகு அவர் தன் ராஜினாமாவை  திரும்ப பெற்றார். என்றாலும் அத்வானி – நரேந்திரமோடி இடையிலான மோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

MODIபாராளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடியை முன்னிறுத்தினால் அது கட்சி தனிநபர் பின்னால் போய்விடுவதுபோல ஆகிவிடும் என்று அத்வானி தொடர்ந்து கூறி வருகிறார். அத்வானியை சந்தித்து பேச நரேந்திரமோடி ஏற்கனவே முயன்றார். ஆனால் அத்வானி சம்மதிக்காததால் மோடியால் அவரை சந்தித்து பேச முடியவில்லை.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் நரேந்திரமோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விமானத்தில் டெல்லி சென்றார். திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்து பேசி குஜராத் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டை பெற அவர் டெல்லி சென்றுள்ளார்.

முதலில் அவர் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷியை சந்தித்து பேசினார். பிறகு அத்வானியின் வீட்டுக்கு சென்றார். நரேந்திரமோடியை அத்வானி புன்னகைத் தவழ வரவேற்றார். அவருக்கு வணக்கம் தெரிவித்த மோடி பூங்கொத்து வழங்கினார்.

இதையடுத்து அத்வானியுடன் நரேந்திரமோடி மனம் விட்டு பேசினார். தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பா.ஜ.க. செயற்குழுவில் பிரசாரக்குழுத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது பற்றி பேசினார்கள். பிறகு அத்வானியின் ஒத்துழைப்பை நரேந்திர மோடி கோரினார்.

இதன்மூலம் அத்வானி – நரேந்திர மோடி இடையே சமரசமும், சுமூக உறவும் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. செயற்குழு நடந்தபோது ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு அத்வானியும் நரேந்திர மோடியும் இன்றுதான் முதன்முதலாக சந்தித்துப் பேசியுள்ளனர். இன்று பிற்பகல் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கையும் நரேந்திர மோடி சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தையும் நரேந்திரமோடி சந்திக்க உள்ளார். அதன்பிறகு மோகன் பகவத், பா.ஜ.க. தலைவர் அத்வானியை சந்திக்க உள்ளார். டெல்லியில் இன்று நடக்கும் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.