இலண்டன்,பிப்.4-பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலாவை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
தலை உட்பட பல இடங்களில் குண்டு பாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மருத்துமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்க பிரிட்டன் அரசு முன்வந்தது.
இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
மேற்கொண்டு சில அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியுள்ளதாகவும் அவற்றை பின்பு செய்து கொள்ளலாம் எனவும் டக்டர்கள் அறிவுரை வழங்கினர்.
உடல்நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டதையடுத்து, அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள ‘வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்’ என்ற இடத்தில் வசித்து வருகிறது.
மலாலாவின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்கான அறுவை சிகிச்சைகள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ராணி எலிசபத் மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
சேதமடைந்த தலை எலும்புகளை ‘டைட்டானியம் பிளேட்’டால் இணைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சைகள் சுமார் 5 மணி நேரம் நடந்தது.
செவித்திறனை இழந்தவர்களுக்கு பொருத்தப்படும் நவீன கருவியும் இந்த அறுவை சிகிச்சை மூலம் மலாலாவின் தலைக்குள் பொருத்தப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின்பு சுயநினைவு திரும்பிய மலாலா நல்ல நிலையில் உள்ளதாகவும், பேசுவதாகவும் ராணி எலிசபத் மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.