ஜூன் 21 – கட்சித் தேர்தல்கள் இவ்வாண்டு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதோடு, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மாநில அளவில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக, பினாங்கு மாநில ம.இ.காவின் தலைவராக வழக்கறிஞரும், பாகான் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா சார்பாக போட்டியிட்டு தோல்வி கண்டவருமான கருப்பண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்பாக பேராக் மாநிலத் தலைவராக இருந்த டத்தோ ஜி.ராஜூ பினாங்கு மாநில ம.இ.காவின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதே போன்று, பேராக் மாநிலத்தின் தலைவராக ஜி.ராஜூவிற்கு பதிலாக, வழக்கறிஞர் டத்தோ ஆர்.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
தேசியத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில் மாநில ரீதியாக தனது நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்திக் கொள்ள பழனிவேல் தனது அதிகாரத்தின் கீழ் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.