ஜூன் 22 – இன்று மக்கள் கூட்டணி சார்பாக தலைநகர் மெர்போக் திடலில் நடைபெறவிருக்கும் 505 கறுப்புப் பேரணி காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் நடைபெறுமா அல்லது சட்டவிரோதப் பேரணி என முத்திரை குத்தப்பட்டு காவல் துறையினருடன் மோதலில் முடிவடையுமா என்ற கேள்வி நாடு முழுமையிலும் தற்போது பொதுமக்களிடையே ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய பேரணிக்கு காவல் துறையினரும் எல்லா ஒத்துழைப்புக்களையும் வழங்குவர் என டாங் வாங்கி காவல் நிலையத்தார் தங்களுக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்துள்ளதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பேரணியை முன்னின்று ஏற்பாடு செய்துவருபவருமான ரபிசி ரம்லி (படம்) கூறினார்.
ஆனால், கோலாலம்பூர் மாநகர காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் சாலே விடுத்திருக்கும் அறிக்கையில் இன்று நடைபெறும் பேரணி சட்டவிரோதப் பேரணி என்றும், அதில் கலந்து கொள்பவர்கள் காவல் துறையினரின் ஆத்திரத்தை தூண்டிவிடும் விதமாக நடந்து கொள்ளவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறியிருக்கின்றார்.
ஏற்பாட்டாளர்கள் இன்றைக்கு நடைபெறும் பேரணியின் மூலம் கலவரத்தை உருவாக்கி, அதன் மூலம் மலேசியக் காவல் துறையினரின் அராஜகத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட உத்தேசித்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியிருக்கின்றார்.
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த ஒலிம்பிக் ஓட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மெர்போக் திடலில் பேரணி நடத்தத் தாங்கள் அனுமதி தரப் போவதில்லை காரணம் அங்கு நடத்தினார் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கோலாலம்பூர் மாநகரசபையினர் அறிவித்துள்ளார்.
அதன் தகவல் ஊடக தொடர்பு அதிகாரி ஹாசான் அபு பாக்கார் தங்களின் முந்தைய நிலைப்பாட்டைத் தாங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளார்.