Home நாடு ‘கறுப்பு 505’ பேரணி – சுமார் 30,000 பேர் திரண்டனர்!

‘கறுப்பு 505’ பேரணி – சுமார் 30,000 பேர் திரண்டனர்!

561
0
SHARE
Ad

Kelana-Jaya-2---Feature

கோலாலம்பூர், ஜூன் 22 – தேர்தல் முறைகேடுகள் தொடர்பான மக்கள் கூட்டணியின் 15 ஆவது ‘கறுப்பு 505’ பேரணி தலைநகர் பாடாங் மெர்போக்கில் இன்று நடைபெறவுள்ளது.

எதிர்கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, தற்போது பிரிக்பீல்ட்ஸ், தேசியப் பள்ளிவாசல், ஜாலான் புடு, ஜாலான் ராஜா லாவுட்டில் இரண்டு இடங்கள், மலாயா பல்கலைக்கழகம், பெகெலிலிங் ஆகிய 7 இடங்களில் பக்காத்தான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

(மாலை 5.30 மணி)அன்வாரின் உரையோடு பேரணி அமைதியான முறையில் நிறைவடைந்தது. 

பேரணியில் பேசிய அன்வார் கூறியதாவது, “இப்பேரணியில் கலந்து கொண்ட அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி கூறியதோடு, ஒத்துழைப்பு கொடுத்த காவல்துறையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

“பாடாங் மெர்போக்கில் ஒன்று கூடி பிறகு இங்கிருந்து மெர்டேக்கா மைதானம் நோக்கி பேரணி செல்வது என்று முதலில் யோசித்தோம். ஆனால் புகைமூட்டம் காரணமாக மக்களின் உடல் நலத்திற்கு கேடு ஏற்பட்டு விடும் என்று கருதி அம்முடிவைக் கைவிட்டோம்.

இருப்பினும் புகைமூட்டத்தை பற்றி கவலைப்படாமல் மக்கள், 7 இடங்களிலும் ஒன்று கூடி பாடாங் மெர்போக் நோக்கி பேரணியை மேற்கொண்டனர்” என்று அன்வார் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தலில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகமட் யூசூப் மற்றும் துணைத்தலைவர் வான் அகமட் வான் ஓமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று குறிப்பிட்ட அன்வார், “நீங்கள் தேர்தல் ஆணையத்தை வழிநடத்த தகுதியில்லாதர்வர்கள். இந்த மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“தேர்தல் முடிவுகளை ஏன் ஏற்க மறுக்குறீர்கள் என்று இந்தோனேசிய பிரதமர் என்னிடம் வினவினார், நாங்கள் தான் போதுத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றோம் என்று கூறினேன். அவர் புரிந்து கொண்டார்” என்று அன்வார் பேரணியில் மக்கள் முன் உரையாற்றினார்.

 (பிற்பகல் 4:35) – பாஸ் உதவித் தலைவர் ஹூசாம் மூசா கைது செய்யப்பட்டதை,  ‘செகுபார்ட்’ என்று அழைக்கப்படும் Solidariti Anak Muda Malaysia  (SAMM) என்ற அமைப்பின் தலைவரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் பேரணியில் அறிவித்தார்.

தற்போது சுமார் 30,000 பேர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டம் 55,000 த்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அதோடு ஹூசாம் மூசாவை விடுதலை செய்ய வேண்டும். அதுவரை இங்கேயே காத்திருப்போமா? என்று கூட்டத்தினரைப் பார்த்து செகுபார்ட் கேட்க,

அனைவரும் பெருங்குரலெடுத்து “காத்திருப்போம்” என்று கூறினர்.

பாடாங் மெர்போக் (பிற்பகல் 4.30 மணி) – பேராக் மாநில முன்னாள் மந்திரி பெசார் நிஸார் ஜமாலுதீன் உரை 

“பேராக் மாநிலத்தில் பக்காத்தான் 55 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. தேசிய முன்னணி 44 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்தி பக்காத்தான் ஆட்சி மலருவதையே மக்கள் விரும்புகின்றனர்”

“பேராக் மாநிலத்தில் பக்காத்தான் தாக்கல் செய்துள்ள 8 தேர்தல் மனுக்களில் 2 தேர்தல் மனுக்கள் வெற்றியடைந்தால் போதும் பக்காத்தான் மீண்டும் ஆட்சி அமைத்துவிடும்”

“பேராக் மந்திரி பெசார் ஸாம்ரி தேர்தல் மனுக்களின் முடிவுகளை எண்ணி மிகுந்த அச்சத்தில் உள்ளார். மேலும் பேராக் மாநில சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவி நியமனத்தை இன்னும் தேசிய முன்னணி அறிவிக்கவில்லை. நேற்று மாலை 5.50 மணியோடு அதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்து விட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

அம்பாங் (பிற்பகல் 4.00) – ஹூசாம் மூசா கைது?

அம்பாங்கில் பாஸ் உதவித் தலைவர் ஹூசாம் மூசா கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று நடைபெறும் இந்த பேரணியில் இறப்பவர்களின் மரணம் ஒரு புனித மரணம் (syahid) என்று மூசா நேற்று வெளியிட்ட அறிக்கை காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிற்பகல் 3.30 – எதிர்கட்சித் தலைவர்களின் உரை 

சிலாங்கூர் துணை சபாநாயகர் நிக் நாஸ்மி நிக் அகமட் – “இங்கு திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும் போது, தேர்தலில் தேசிய முன்னணி செய்த தேர்தல் முறைகேடுகள் உண்மை என்று நிரூபனமாகிறது”

பெர்சே இயக்க இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் – “தேர்தல் ஆணையம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அதுவே இன்று கூடியிருக்கும் இந்த பேரணியின் நோக்கம்”

பாஸ் காலிட் சமட் – “தேர்தல் ஆணையம் பதவி விலகி புதிய தேர்தல் ஆணையம் அமைக்கப்படும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை”

பிற்பகல் 3.20 மணி -தெங்கு அட்னான் எச்சரிக்கை 

போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பேரணியை மெர்டேக்கா மைதானத்திற்கு மாற்றும் படி பேரணி ஆதரவாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடாங் மெர்போக் திடலில் பேரணி நடத்துவது முறையற்றது என்று குறிப்பிட்ட தெங்கு அட்னான், அதையும் மீறி பேரணி நடத்தினால் ஒருங்கிணைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிற்பகல் 12.50 மணியளவில் பாடாங் மெர்போக் திடலுக்கு காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு வந்து பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 3.07 மணி – நூருல் இஷா வரவேற்புரை

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஷா பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.

பாஸ் காலிட் சமட் கூட்டத்தினரை நோக்கி உரையாற்றத் தொடங்கினார். பேரணியில் கலந்து கொண்டுள்ள ஆதரவாளர்கள் அனைவரும் திடலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லலாம். இதன் மூலம் தேசிய முன்னணி அரசாங்கம் மக்களின் சக்தியை புரிந்து கொண்டது என்று தெரிவித்துள்ளார்.

பாடாங் மெர்போக் (பிற்பகல் 3.00 மணி)

பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை விட மக்கள் கூட்டணி 118,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. ஆகையால் பக்காத்தான் பெராக் மாநிலத்தில் தோற்கவில்லை என்று பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் வி. சிவகுமார், பாடாங் மெர்போக்கில் கூடியிருக்கும் ஆதரவாளர்கள் முன் உரையாற்றினார்.

ஜாலான் பார்லிமென்ட் (பிற்பகல் 2.45)

சோகோ வணிக வளாகத்திலிருந்து புறப்பட்ட கூட்டத்தினரும், பாஸ் தலைமையகத்தில் இருந்து புறப்பட்டவர்களும் மற்றும் பிரிக்பீல்ட்ஸில் இருந்து புறப்பட்டவர்களும் ஜாலான் பார்லிமென்ட்டில் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு மாபெரும் கூட்டமாக பாடாங் மெர்போக்கை நோக்கி பேரணி மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறை கலக தடுப்புப் படையைச் சேர்ந்த பிரிவினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டு எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம் கண்காணித்து வருகின்றனர்.

சோகோ வணிக வளாகம் (பிற்பகல் 1.40)

எதிர்கட்சித் தலைவர்கள் பலர்,சுமார் 2000  ஆதரவாளர்களோடு சோகோ வணிக வளாகத்தில் கூடியுள்ளனர்.

பிற்பகல் 2.30 மணியளவில் பாடாங் மெர்போக் திடலை நோக்கி நடக்க அவர்கள் திட்ட மிட்டுள்ளனர். அதுவரை ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த எதிர்கட்சித் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.

பாடாங் மெர்போக் திடல் (பிற்பகல் 1.00 மணி)

பாடாங் மெர்போக் திடலில் மதியம் 12 மணியிலிருந்து ஆங்காங்கே ஆதரவாளர்கள் கூடத் தொடங்கியுள்ளனர். கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் பாடாங் மெர்போக் திடலுக்கு காவல்துறை அதிகாரிகளுடன் வந்து பார்வையிட்டார்.

பிற்பகல் 1.15 – மஸ்ஜித் நெகாராவில் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பிற்பகல் 1.20 – பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சோகோ கூட்டத்தினரிடையே உரையாற்றினார். பிற்பகல் 2.30 மணியளவில் அவர்கள் பாடாங் மெர்போக்கை நோக்கி பேரணி செல்லவிருப்பதாக அறிவித்தார்.

மலாயா பல்கலைக்கழகம்  (பிற்பகல் 1.00 மணி)

மலாயா பல்கலைக் கழகத்தின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் பிரிக்பீல்ட்சை நோக்கி தங்களது பேரணியைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கூட்டதினரோடு மாணவப் போராட்டவாதி ஆடாம் அட்லி மற்றும் பக்காத்தான் கட்சித் தலைவர்கள் பலர் உள்ளனர்.

பாஸ் தலைமையகம் (மதியம் 12. 30 மணி)

மதியம் 12. 30 மணியளவில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிக் முகமட் நிக் அப்துல் அஜீஸ் மற்றும் புக்கிட் கன்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் இட்ரிஸ் அகமட் ஆகியோர் பாஸ் தலைமையகத்திற்கு வந்தனர். அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களோடு பாடாங் மெர்போக் திடலுக்கு பேரணி செல்ல தயாராயினர்.

“முந்தைய பேரணிகளைப் போல் இந்த பேரணியும் எந்த ஒரு மோதலும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும்” என்று இட்ரிஸ் அகமட் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.

பாடாங் மெர்போக் திடல் (காலை 9.30 மணி)

இன்று காலை 9.30 மணி முதல் குறிப்பிட்ட இடங்களில் பக்காத்தான் ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கையில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான பதாகைகளை ஏந்திக் கொண்டும் கூடத் தொடங்கினர்.