கோலாலம்பூர், ஜூன் 27- கண்ணதாசன்… புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் 26ஆவது கண்ணதாசன் விழா இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை 30.6.2013 திகதி தலைநகர் ஜாலான் ராஜா லாவூட்டில் அமைந்துள்ள டேவான் பண்டாராயாவில் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
கண்ணதாசன் அறவாரியத்தலைவரும் விளையாட்டுத் துறை துணை அமைச்சருமான டத்தோ எம். சரவணன் துணையமைச்சர் பதிவு ஏற்ற பிறகு அவர் மேற்பார்வையில் பங்கு பெறும் முதல் இலக்கிய நிகழ்ச்சி இது.
நிகழ்ச்சிகளின் பட்டியல்
டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ச.சாமிவேலு தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்,காலை அங்கத்தில் ஜி.குளோபல் மீடியாவின் நிறுவனர் திருமதி கீதாஞ்சலி ஜி குத்துவிளக்கை ஏற்றி தொடக்கி வைப்பார்.
சிங்கை கவிஞர் பார்தேறல் இளமாறனின் முதல் கவிதையும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பேச்சாளர்களின் சிறப்புரைகளும் இந்நிகழ்வில் இடம்பெறும்.
கண்ணதாசனின் ‘வனவாசம்’ எனும் தலைப்பில் திருவாரூர் சண்முக வடிவேல் உரையாற்றுவார். கண்ணதாசனின் ‘ஆட்டனதி ஆதமந்தி’ எனும் தலைப்பில் இலக்கியச்சுடர் த. ராமலிங்கம் உரையாற்றுவார். அவரை தொடந்து, கண்ணதாசனின் ‘மாங்கனி’ எனும் தலைப்பில் பள்ளத்தூர் திருமதி சரஸ்வதி இராமனாதன் உரையாற்றுவார்.
அதன் பிறகு, மதிய உணவிற்கு பிறகு 2.30க்குத் தொடங்கும் இரண்டாம் அங்கத்திற்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாகி டத்தோ பா. சகாதேவன் தலைமை ஏற்பார்.
மலேசிய திரைப்படத் தொலைக்காட்சி தொழில் நுட்ப கலைஞர்கள் இயக்கத்தின் தயாரிப்பில் கவிஞர் கண்ணதாசனைப் பற்றியக் குறும்படம் திரையிடப்படும்.
தொடர்ந்து, கண்ணதாசனை கவியரசர் என போற்றுவதற்கு காரணம் ‘திரை இசைப் பாடலகள்’ மற்றும் ‘தனி பாடல்கள்’ என்று பட்டிமன்றம் நடைபெறும். இவ்வங்கத்திற்கு திருமதி சரஸ்வதி இராமனாதன் நடுவராகவும் திரையிசைப் பாடல்களே என்று இலக்கியச் சுடர் ஜி ராமலிங்கமும் கவிஞர் க.இளமணியும் கருத்துக்களை எடுத்துரைக்க தனிப்பாடல்களே என்று திருவாருர் சண்முக வடிவேலுவும் கவிஞர் நீல மது மயனும் உரையாற்றுவார்கள்.
ஆண்டுதோறும் ஐந்து இலக்கியப் படைப்பாளர்களை சிறப்பித்து வரும் அறவாரியம் இவ்வாண்டு நாவலாசிரியர், எழுத்தாளர் பா.சந்திரகாந்தம், சைவமணி பெருமாள், நகைச்சுவை கலைஞர் சந்திரபோஸ், ஓவியக் கலைஞர் லேனா என்ற லெட்சுமணன் ஆகியோரை சிறப்பிக்கவுள்ளது.
இவ்விழாவில் பேச்சுகளுக்கிடையே கவிஞரின் அற்புதமான பாடல்களுக்கு தலைநகர் இந்திராணி நடனப் பள்ளி மாணவிகள் நடனமாடுவார்கள்.
இலக்கிய ஆர்வலர்கள் திரளாக வருகை தந்து இலக்கியத்தில் பங்கு பெற்றுச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.