மதுரை,பிப்.5- மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த 7 பேர், வீடியோ கான்பரன்சிங் மூலம் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டனர். ஏழு பேரையும் ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர். கடந்த ஜன.31ல் கும்பலால் இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், மதுரையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி கூலிப்படை மூலம் இக்கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.கொலை தொடர்பாக சபா என்ற சபாரத்தினம், சந்தானம், ராஜு என்ற நாகமுருகன், லிங்கம், செந்தில், சேகர், கார்த்தி ஆகிய 7 பேர் நத்தம் கோர்ட்டில் சரணடைந்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், 7 பேரும் பாதுகாப்பு காரணத்திற்காக மதுரை கோர்ட்டுக்கு நேற்று நேரில் அழைத்து வரவில்லை. இதனால், சேலம் மத்திய சிறையில் இருந்தபடி 7 பேரும் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஒரு நாள் காவல் நீட்டிப்பு செய்து ஜெ.எம்,4 மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் உத்தரவிட்டார். ஏழு பேரையும் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனிடையே, 7 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சுப்பிரமணியபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராஜ் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் முகாம்: அட்டாக் பாண்டியை தேடி நெல்லை, தூத்துக்குடியில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். 5 பேர் கொண்ட நெல்லையைச் சேர்ந்த கூலிப்படையினரும் அவருடன் பதுங்கி உள்ளதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடியிலுள்ள சில கிராமங்களில் ரகசிய போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சரணடையும் முன் அவரை கைது செய்வதற்காக தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து கோர்ட் முன்பும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
02:10:16
Tuesday