கூடலூர், பிப்.5-தமிழக,கேரள எல்லையில் புலி தாக்கி 2 பசுமாடுகள் பலியாயின. இது குறித்து விசாரிக்க சென்ற 5 பேர் கொண்ட குழுவை, புலி கடித்து குதறியதால் வனத்துறையினர் அதை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமரம் பகுதியில் கடந்த சில மாதங்கள் முன்பு கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 12 வயது பெண் புலியை வனத்துறையினர் பிடித்து முத்தங்கா சரணாலயத்தில் விடுவித்தனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் தமிழக, கேரள எல்லையில் உள்ள மூலங்காடு பகுதியை சேர்ந்த தம்பி, சண்முகம் ஆகியோருக்கு சொந்தமான 2 பசுக்களை புலி அடித்து கொன்றது. இதுகுறித்து விசாரணை நடத்த பத்தேரி தாசில்தார் விஜயன்(53), பள்ளி ஆசிரியர் கிருஷ்ணகுமார்(53), மூலங்காவு பேரூராட்சி தலைவர் ஐயுப்(44), வன ஊழியர் ராஜன்(34), பள்ளி மாணவி சிபினா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் மாலை மூலங்காடு பகுதிக்கு சென்றனர்.
கிராம மக்களிடம் புலியின் நடமாட்டம் குறித்து இக்குழுவினர் விசாரித்து கொண்டிருந்தபோது, புதர் ஒன்றில் மறைந்திருந்த புலி அவர்கள் மீது திடீரென பாய்ந்தது. புலியை கண்ட பொதுமக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர்.