Home வணிகம்/தொழில் நுட்பம் இலண்டனில் நஜிப் – பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இணைந்து பேட்டர்சீ நில மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடிக்கல்...

இலண்டனில் நஜிப் – பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இணைந்து பேட்டர்சீ நில மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவர்!

513
0
SHARE
Ad

Battersea-Sliderஇலண்டன், ஜூலை 1 சரித்திர பிரசித்தி பெற்ற நிகழ்வாக கருதப்படும் பேட்டர்சீ நில மேம்பாட்டுத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் வியாழக்கிழமை இலண்டனில் நடைபெறவிருக்கின்றது. இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மலேசியப் பிரதமர் நஜிப், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இருவரும் இணைந்து பங்கு பெறுவர்.

#TamilSchoolmychoice

பேட்டர்சீ என்பது இலண்டனின் மையத்தில் ஓடும் தேம்ஸ் நதிக் கரையின் ஓரம் அமைந்துள்ள ஒரு பழமையான மின்சார உற்பத்தி நிலையமாகும்.

39 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலப்பகுதி நில மேம்பாட்டுக்காக அண்மையில் விடப்பட்ட குத்தகையில், மலேசியாவின் எஸ்.பி.செத்தியா நிறுவனம், மலேசியாவின் மற்றொரு பெரிய வர்த்தக அமைப்பான சைம் டார்பி மற்றும் ஊழியர் சேமநிதி வாரியம் ஆகியவற்றோடு இணைந்து வெற்றி பெற்றது. ரஷியாவின் பிரபல கோடீஸ்வரரும், செல்சி கால்பந்தாட்டக் குழுவின் உரிமையாளருமான ரோமன் அப்ரோவிச் மற்றும் மலேசியாவின் தாபோங் ஹாஜி நிறுவனம் போன்றோரும் இந்த திட்டத்தில் வெற்றி பெற ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் மதிப்பு 400 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்கள் அதாவது ஏறத்தாழ 1.92 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

பிரிட்டனில் ஒரு மலேசிய நிறுவனம் மிகப் பெரிய அளவில் நில மேம்பாட்டில் களமிறங்குவது இதுவே முதன் முறையாகும் என்பதால் இந்த திட்டம் ஐரோப்பிய நாடுகளில் கூட அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட 866 அடுக்குமாடி குடியிருப்பில் 95 சதவீத வீடுகள் தொடங்கிய சில நாட்களிலேயே உள்நாட்டு வெளிநாட்டினரிடையே விற்றுத் தீர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இலண்டனில் மிக துரிதமாக விற்பனை செய்யப்பட்ட வீடமைப்பு திட்டமாக இது கருதப்படுகின்றது.

ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மட்டும் நில மேம்பாட்டுத் திட்டங்கள் இலண்டனில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 39 ஏக்கர் நிலப் பரப்பில் மலேசிய நிறுவனம் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது பிரிட்டனின் வர்த்த சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த பேட்டர்சீ மின் உற்பத்தி கட்டிடம் நீண்ட காலமாக இலண்டனின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. பல ஆங்கிலத் திரைப்படங்களில் இதனைப் பார்த்திருக்கலாம்.

இந்த மேம்பாட்டுத் திட்டம் முழுமையடையும்போது அதன் மதிப்பு சுமார் 38 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என்பதுடன் சுமார் 25,000 வேலை வாய்ப்புக்களையும் இது உருவாக்கும்.