ஜோர்ஜ் டவுன், ஜூலை 3 – பினாங்கு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற முதல் அமர்வு கூட்டத்தில், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் (படம்) தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“கேள்வி நேரத்திற்கு கட்டாயம் நேரம் ஒதுக்க வெண்டும்” என்றும் இன்று மதியம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் அவைச் செயலாளரிடம் இது குறித்து கேட்டேன், அதற்கு மாநில சட்ட ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார்” என்று லிம் குவான் தெரிவித்தார்.
அதோடு, “கடந்த ஜூன் 28 ஆம் லா சூ கியாங் சபாநாயகராக பதவி ஏற்பதற்கு முன்பு வரை, அவைச் செயலாளர் சட்ட ஆலோசகரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப செயல் பட்டு வந்தார். ஒருவேளை அவை உறுப்பினர்களுக்கு கேள்விகளை தயார் செய்ய போதுமான கால அவகாசம் கொடுக்காததால் கேள்வி நேரத்தை அவர் ரத்து செய்திருப்பதாக நான் நினைக்கிறேன். இருப்பினும் சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. சட்ட ஆலோசகரிடம் இது குறித்து விசாரிப்போம்” என்று லிம் குவான் கூறினார்.
இன்று காலை, பினாங்கு சட்டமன்றத்தில் நேரத்தை மிச்சப்படுத்த, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக சபாநாயகர் லா சூ கியாங் அறிவித்ததை அடுத்து, அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பினாங்கு மாநில எதிர்கட்சித் தலைவரான ஜஹாரா ஹமீடி (தெலுக் ஆயர் தவார் சட்டமன்றம்), “இது ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை” என்று விமர்சித்தார்.