ஜூலை 5- சூர்யா நடித்த ‘சிங்கம்-2’ படம் இன்று வெளியிடப்பட்டது. இதில் நாயகிகளாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். இப்படம் குறித்து சூர்யா கூறியதாவது:-
‘சிங்கம்.2’ படத்தில் வில்லன்கள் சர்வதேச தொடர்பில் பலம் பொருந்தியவர்களாக இருப்பார்கள். முழுக்க முழுக்க பொழுதுபோக்குடன் கூடிய நகைச்சுவை, காதல், அதிரடி சண்டை காட்சிகள் என பல கலவையாக படம் தயாராகியுள்ளது. நிச்சயம் ரசிகர்களுக்கு இந்தப்படத்தை மிகவும் பிடிக்கும்.
‘சிங்கம்-2’ படத்தில் நிறைய புதுமைகள் உள்ளன. சந்தானம், ஹன்சிகா கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். வில்லன் கதாபாத்திரம் கொடூரமாக இருக்கும். தேவி ஸ்ரீபிரசாத் இசை பெரிய பலம். கதையோடு இசை பயணிக்கும். படத்தை நாங்கள் பார்த்தோம். சிறந்த படம் என்ற உணர்வு ஏற்பட்டது. நிச்சயம் படம் வெற்றி பெறும். ரசிகர்கள் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.
‘சிங்கம்’ படம் வெளியான பிறகு ரசிகர்கள் ‘சிங்கம்-2’ எப்போதும் வரும் என்று அடிக்கடி கேட்க தொடங்கினர். டைக்டர் ஹரியிடம் இதுகுறித்து பேசினேன். அவரும் அதற்கான கதையை தயார் செய்தார். இப்போது அதை எடுத்து முடித்து வெளியீடு செய்து விட்டோம். இதன் மூன்றாம் பகுதி வருமா? என்பது படத்தின் வெற்றியை பொறுத்து அமையும். ஹரி அதற்கான கதையை உருவாக்கினால் ‘சிங்கம்-3’ படம் எடுப்பது சாத்தியம் ஆகலாம்.
அடுத்து கவுதம்மேனன், லிங்குசாமி இயக்கும் படங்களில் நடிக்க உள்ளேன். இரண்டு படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில்கூட நடக்கலாம். இவ்வாறு சூர்யா கூறினார்.