Home அரசியல் “பக்காத்தானை சமாதானப்படுத்துவதற்காக தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டாம்” – மகாதீர் கருத்து

“பக்காத்தானை சமாதானப்படுத்துவதற்காக தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டாம்” – மகாதீர் கருத்து

500
0
SHARE
Ad

Dr Mahathirபெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – எதிர்கட்சிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் அரசாங்கம், தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ நீக்கி விடக்கூடாது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தியுள்ளார்.

தேச நிந்தனைச் சட்டத்தை திருத்தம் செய்யவோ அல்லது அது போன்ற ஒரு புதிய சட்டம் இயற்றவோ அரசாங்கம் முயல வேண்டும். மேலும் இச்சட்டம் குறித்து மக்களின் கருத்துக்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றும் மகாதீர் கூறியுள்ளார்.

“எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை, மலேசியாவில் சட்டமே இருக்கக் கூடாது. எனவே சட்டங்களை சீர்படுத்த முடியாது. அவர்கள் தரும் அழுத்தம் தான் இதற்குக் காரணம்.”

#TamilSchoolmychoice

“அதேநேரத்தில், அவர்கள் சட்டம் இயற்றும் விதிமுறைகள் எங்கே என்றும் அவர்கள் கேள்வி கேட்பார்கள். சட்டமே இல்லை என்னும் போது, அதை இயற்ற விதிமுறைகள் எங்கே இருக்கும்?” என்று மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, தேச நிந்தனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் இயற்றுவதையோ அல்லது சட்டதிருத்தம் செய்வதையோ நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது பிரதமரின் கைகளில் உள்ளது. நாம் ஒரு சட்டத்தை நீக்குவதாக இருந்தால், அது முற்றிலும் பயனற்றதாக இருக்க வேண்டும், அதற்கு சட்டமே இல்லாமல் இருந்துவிடுவது நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று மகாதீர் பதிலளித்துள்ளார்.

மேலும், கடந்த வருடம் ஜூன் மாதம் 22 ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 1960 (ISA) ரத்து செய்யப்பட்ட பிறகு, தேச நிந்தனைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு முன்பு வரை அடுத்தவர் மதங்களை இழிவுபடுத்துவது போன்ற குற்றச்செயல்கள் குறைந்திருந்ததாகவும் மகாதீர் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.