தாகா,பிப்.6- வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி என்ற பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் காதர் முல்லா (65). இவர் 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த சுதந்திர போரின்போது, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து தாகாவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், வழக்கில் தீர்ப்பாய நீதிபதி உபைதுல் ஹாசன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில், முல்லா மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளதால், அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிப்பதாக கூறப்பட்டிருந்தது. தீர்ப்பு வெளியானதும், முல்லாவின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இந்த மோதலில் ஒருவர் உயிர் இழந்தார். தலைநகர் தாகாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.