Home அரசியல் ம.இ.கா தேசிய தலைவர் தேர்தல்: பழனிக்கு எதிராக சோதியா? அமைச்சர் பதவியை இழக்கும் பயத்தில் சுப்ரா...

ம.இ.கா தேசிய தலைவர் தேர்தல்: பழனிக்கு எதிராக சோதியா? அமைச்சர் பதவியை இழக்கும் பயத்தில் சுப்ரா போட்டியிடத் தயக்கம்

542
0
SHARE
Ad

ஜூலை, 12 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ம.இ.கா தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில், நடப்பு தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் என்றும், உதவித் தலைவர் டத்தோ சரவணன் என்றும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் தான் டத்தோ எஸ்.சோதிநாதன்.

palani-micம.இ.கா வின் முன்னாள் துணைத்தலைவர் மற்றும் பொதுச் செயலாளரான சோதிநாதன், வரும் ம.இ.கா தலைமைத்துவ தேர்தலில் பழனிவேலுக்கு எதிராகக் களமிறங்கப் போவதாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ம.இ.கா தேசிய துணைத் தலைவருக்கான தேர்தலில், பழனிக்கு எதிராக சோதிநாதன் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். அப்போட்டியில் சோதிநாதன் 280 வாக்குகளும், பழனி 629 வாக்குகளும் மற்றும் மற்றொரு வேட்பாளரான டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் 547 வாக்குகளும் பெற்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதியில் பக்காத்தான் வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்ட சோதி தோல்வியைத் தழுவினார். எனினும், நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோதிக்கு பதிலாக வி.எஸ் மோகனை, பழனிவேல் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே, பழனிக்கு எதிராக சோதி களமிறங்குவதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் சுப்ரா தோற்றால் அமைச்சர் பதவியை இழக்கும் அபாயம் SUBRA

தலைவர் தேர்தலில் பழனிவேலுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள், ஒருவேளை தோல்வியுறும் பட்சத்தில் அவர்கள் தங்கள் அமைச்சர் பதவியை இழக்கப்போவது உறுதி என்று பழனி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் ஒரு தவணைக் காலம் தான் தலைவர் பதவி வகிப்பேன் என்ற பழனி வெளியிட்ட அறிவிப்பால் மிகவும் அதிர்ச்சியில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள், பழனியை எதிர்த்து சுப்ரா போட்டியிடலாம் என்று கருதி, அந்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு பழனியை வற்புறுத்தி வருகின்றனர்.

பழனியை எதிர்த்து தான் போட்டியிடப் போவதில்லை என்று சுப்ரா கூறிவந்தாலும், தக்க தருணத்தில் அவர் அறிவிப்பார் என்றே கருதப்படுகிறது. தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சுப்ராவின் தயக்கத்திற்குக் காரணம் தேர்தலில் அவர் தோல்வியுறும் பட்சத்தில், தனது அமைச்சர் பதவியை அவர் இழக்க நேரிடும் என்பது தான்.

அமைச்சர்களை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் பிரதமருக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறப்பட்டாலும், பிரதமர் கூட்டணிக் கட்சி தலைவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தான் அமைச்சர்களை தேர்வு செய்வார்.

எனவே, பழனிக்கு எதிராக சுப்ரா போட்டியிட்டு தோற்றால், அவர் தனது அமைச்சர் பதவியை விட்டு விலகும் படி, பல நெருக்குதல்களுக்கு  உள்ளாவார்.

Samy Velluசாமி மற்றும் சரவணன் தலைமையில் குழு

பழனியை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த குழுவுக்கு பின்புலமாக செயல்படுவது, ம.இ.கா வின் முன்னாள் தேசியத் தலைவர் எஸ்.சாமிவேலுவும், அக்கட்சியின் நடப்பு உதவித்தலைவரும், துணை அமைச்சருமான எம்.சரவணனும் தான் என்று ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த குழு, பழனிக்கு எதிராக சுப்ராவை போட்டியிட வைக்க எவ்வளவோ முயன்றும் முடியாததால் தான், சோதியை களமிறக்கும் அடிப்படை வேலைகளை செய்து  வருவதாகத் தெரிகிறது.

பழனி இன்னும் ஒரு தவணை காலம் தான் பதவியில் இருப்பேன் என்று அறிவித்துள்ளதால், சுப்ரா இன்னும் ஒரு தவணை காத்திருந்தால் போதும், தற்போது துணைத் தலைவராக இருக்கும் அவர் எளிதில் தலைவர் பதவியை போட்டியின்றி அடைந்துவிடலாம்.

அதுமட்டுமின்றி, தற்போது தான் வகித்து வரும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை சுப்ரா மிகவும் நேசிக்கிறார். காரணம், தான் ஒரு மருத்துவர் என்பதால், சுகாதாரத்துறையில் பணியாற்றுவதன் மூலம் அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றும் சுப்ரா நம்புகிறார்.dato-saravanan

இதன் காரணமாகவே தான், அவர் பழனியை எதிர்த்து களம் இறங்க தயக்கம் காட்டி வருகிறார்.

அதே நேரத்தில், கட்சியின் நடப்பு உதவித் தலைவரான சரவணனும், தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக அவர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன் மூலம் கட்சியின் அடுத்த தலைவர் என்ற நிலையை அடைய எண்ணுகிறார்.

ஆகவே, சோதிநாதனை களமிறக்குவதன் மூலம், பழனியை தலைவர் பதவியிலிருந்து தோற்கடித்து, தங்களது வலிமையை நிரூபிக்க அக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், தற்போது எந்த அரசாங்கப் பதவியும் வகிக்காத சோதி, மிகுந்த எச்சரிக்கையுடன் தான் இப்போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ம.இ.கா வில் தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கை நிரூபிக்க அவருக்குக் கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இந்த தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் மட்டுமே.