மும்பை, ஜூலை 13- இந்தி திரையுலகில் புகழ் பெற்ற வில்லனாக வலம் வந்த நடிகர் பிரான், மும்பையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.
மிலன், மதுமதி, காஷ்மீர் கி காலி, ஜன்ஜீர், டான், அமர் அக்பர் அந்தோனி, உப்கார் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து புகழ்பெற்றவர், நடிகர் பிரான்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றிரவு மரணம் அடைந்தார்.
பிரான் இறந்த செய்தியை அறிந்ததும் இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லியில் கடந்த மே மாதம் 3ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பிரான் பங்கேற்கவில்லை. அவரது சார்பில் மற்றவர்களிடம் இந்த விருதினை வழங்க மரபுகள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மே மாதம் 10ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் பிரானின் வீட்டிற்கு சென்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி மணிஷ் திவாரி, தாதா சாகிப் பால்கே விருது எனப்படும் தங்கத் தாமரை, பாராட்டுப் பத்திரம், சால்வை, ரொக்கப்பணம் ரூ.10 லட்சம் ஆகியவற்றை பிரானிடம் வழங்கினார்.
ஒரு கலைஞரின் வீட்டிற்கு மத்திய மந்திரி நேரில் சென்று தாதா சாகிப் பால்கே விருதினை வழங்கியது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதினை 2001-ம் ஆண்டு பெற்ற பிரானின் உடல் மும்பை சிவாஜி பூங்கா மயானத்தில் நாளை தகனம் செய்யப்படுகிறது.