ம.இ.கா தேர்தல் முடிவுகளை அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக மாற்றுவதில் தமிழ் நாளிதழ்கள் எப்போதுமே முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக, ம.இ.கா தலைவர்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் அறிக்கைகளை விடுவதற்கு தமிழ் நாளிதழ்களை ஒரு ஊடகமாகப் பயன்படுத்திவருகின்றனர்.
நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்கட்சிகளின் அறிக்கைகளையும், விமர்சனங்களையும் அதிக அளவில் இடம்பெறச் செய்து, குறைந்த காலத்தில் விற்பனையைப் பெருக்கிய தினக்குரல் நாளிதழ், தற்போது ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ சரவணனுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வருகிறது.
மறைந்த பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் ஆசிரியரான ஆதி குமணன் அவர்களின் மகனான அருண்குமார் தான் ‘தினக்குரல்’ நாளிதழின் நிறுவனர். எனினும், கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரியான டத்தோ ஆர்.ரமணன் இந்த பத்திரிக்கையில் அண்மையில் பங்குதாரராக பங்கெடுத்துள்ளதாக ஆரூடங்கள் கூறப்படுகிறது.அதற்கேற்றார் போல் தற்போது, தினமும் ரமணனின் செய்திகளையும்,அறிக்கைகளையும் தீவிரமாக வெளியிட்டுவருகிறது தினக்குரல் நாளிதழ்.
இந்நிலையில், எதிர்வரும் ம.இ.கா தேர்தலில்,பழனிவேலின் ஆதரவாளரான ரமணன் ம.இ.கா வின் தேசிய இளைஞர் அணித்தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரவணனை தாக்கும் தினக்குரல் செய்திகள்
தமிழ் நாளிதழ்களுடன் எப்போதுமே சுமூகமான உறவை வைத்திருப்பவரான சரவணனைப் பற்றி, நேற்று தினக்குரல் முதல் பக்கத்தில் வந்த துணிச்சலான செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சரவணன் பகிரங்கமாக தனக்குள்ள சொத்துக் கணக்குகளை அறிவிக்க முடியுமா என்று ரமணன் தனது பத்திரிக்கை அறிக்கையில் சவால் விடுத்திருந்தார். சரவணன் ஒரு பெரிய பங்களாவையும், ஆடம்பரக் கார் ஒன்றையும் வைத்திருக்கின்றார் என்றும், துணை அமைச்சராகப் பதவி வகிக்கும் சரவணனுக்கு குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது என்று ‘தினக்குரல்’ நாளிதழ் மூலம் ரமணன் கேள்வி எழுப்பியிருந்தார்.
சவால் விடுத்திருந்த ரமணன், தானும் தனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்கத் தயார் என்று அறிவித்திருந்தார்.
அதேநேரத்தில், இன்று தினக்குரலில் வந்த முதல் பக்க செய்தியில், சரவணன் தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பழனிவேலுக்கும்
ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலு குடும்பத்தினரின் சொந்த பத்திரிக்கையான தமிழ் நேசன், கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடந்த ம.இ.கா கட்சித் தேர்தல்களில், பழனிவேல் துணைத்தலைவர் பதவியில் வெற்றி பெறுவதற்கு பெரிதும் ஆதரவு கொடுத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, பழனிவேலுக்கு எதிராக எந்த ஒரு செய்தியும் வெளியிடாத தமிழ் நேசன், வேள்பாரி மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பிறகு பழனிக்கு எதிராக தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.
கடந்த வியாழனன்று, அதாவது வேள்பாரி நீக்கப்பட்டதற்கு மறுநாள், தமிழ் நேசனின் முதல் பக்கத்தில், ம.இ.கா கட்சியில் தனது தலைவர் பதவியை வலுப்படுத்தவும், தலைவர் பதவிக்கான தேர்தலில் சுப்ராவை வெற்றி பெறவும், பழனிவேல் ம.இ.காவின் 500 கிளைகளை மூட திட்டமிடுவதாக தமிழ் நேசன் செய்தி வெளியிட்டு இருந்தது.
நேற்றைய செய்தியில், பழனிவேலின் பலவீனமான தலைமைத்துவத்தை மாற்ற ம.இ.கா தலைமைத்துவ தேர்தல் கட்டாயம் தேவை என்று கூறியிருந்தது. அதோடு, பிரபல அரசியல் எழுத்தாளர் பெரு.அ.தமிழ் மணி அவர்கள், நாளை முதல் ம.இ.கா வில் தலைமைத்துவ மாற்றத்தின் அவசியம் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதப்போவதாகவும் தமிழ் நேசன் அறிவித்திருந்தது.
தமிழ் நேசனின் இன்றைய முதல் பக்க செய்தியில், தாங்கள் நடத்திய கணக்கெடுப்பின் படி, தலைவர் பதவிக்கான தேர்தலில் பழனிவேலுக்கு ஆதரவாக 35 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளது.
தலைவர் பதவிக்கான தேர்தலில், ம.இ.கா கட்சியின் கிளைத் தலைவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அந்த வகையில், தற்போது மொத்தம் 4,000 கிளைத் தலைவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர்.
மேலும், ம.இ.கா மத்திய செயற்குழுவில் பழனிவேலால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தர் சுப்பிரமணியம் மக்கள் ஓசை நாளிதழை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். எனவே மக்கள் ஓசை இனி பழனிவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ! எதிர்வரும் நாட்களில், ம.இ.கா தலைவர்கள் இந்த 5 தமிழ் பத்திரிக்கைகளின் வாயிலாக ஒருவரையொருவர் தாக்கி சூடான அறிக்கைகளை விட்டு, அந்த பத்திரிக்கைகளின் விற்பனையை அதிகரிக்கச் செய்வார்கள் என்பது உறுதி.