இஸ்லாமாபாத், ஜூலை 21– பாகிஸ்தானில் கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதைத்தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் 3–வது முறையாக மீண்டும் பிரதமரானார். தற்போது பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவி வகித்து வருகிறார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அவரின் பதவிக்காலம் வருகிற செப்டம்பரில் முடிகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6–ந்தேதி நடைபெறுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி சார்பில் தற்போதைய பஞ்சாப் மாகாண முதல்– மந்திரி ஷாபாஸ் ஷெரீப் ( வயது 61) நிறுத்தப்படுகிறார்.
இவர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடன் பிறந்த இளைய தம்பி ஆவார். இத்தகவலை நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு தனிப்பெரும் பான்மை எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஷாபாஸ் ஷெரீப் வெற்றி பெறுவது உறுதி.