Home அரசியல் ம.இ.கா மாநில தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றங்கள் – பழனிவேலின் அடுத்த குறி சரவணன்?

ம.இ.கா மாநில தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றங்கள் – பழனிவேலின் அடுத்த குறி சரவணன்?

627
0
SHARE
Ad

Palanivelகோலாலம்பூர், ஜூலை 23 – எதிர்வரும் ம.இ.கா தேர்தலை முன்வைத்து அக்கட்சியின் நடப்பு தேசியத்தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பல அதிரடியான மாற்றங்களைச் செய்து வருகிறார்.

பினாங்கு, பேராக், மலாக்கா, பகாங், கெடா ஆகிய மாநிலங்களிலுள்ள ம.இ.கா தொடர்புக்குழு தலைமைத்துவ மாற்றங்களுக்குப் பின்னர், அடுத்த நடவடிக்கையாக கூட்டரசுப் பிரதேச மாநில ம.இ.கா தலைவர் டத்தோ எம்.சரவணனையும் மாற்றப்போவதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

டத்தோ சரவணனுக்குப் பதிலாக மாநில துணைத்தலைவர் டத்தோ சந்திரசேகர் சுப்பையா நியமிக்கப்படலாம் என்றும் அல்லது  இந்த நியமனம் தள்ளி வைக்கப்படலாம் என்றும் நம்பத்தகுந்த ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

ம.இ.கா தலைமைத்துவ தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், மாநில தலைமைத்துவத்தில் தொடர்ச்சியாக பல மாற்றங்களை பழனிவேல் நிகழ்த்திவருகிறார்.

அதன்படி, அவர் எந்த நேரத்திலும் சரவணனை மாற்றி சந்திரசேகரை நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, மாநில துணைத்தலைவர் பதவிக்கு சிகாம்புட் தொகுதி தலைவர் டத்தோ வி. ராஜூ நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பண்டார் துன் ரசாக் தொகுதித் தலைவரான டத்தோ சந்திரசேகரின் தலைமைத்துவத்தில், மத்திய செயலவைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட சுந்தர் சுப்ரமணியம், மலர்விழி குணசீலன், அன்புமணி பாலன் ஆகியோர் இடம் பெறலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன.

பழனிவேலின் அதிரடி மாற்றங்கள்

கடந்த மாதங்களில் மட்டும் பழனிவேல் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் ம.இ.கா தொடர்புக் குழு தலைவர்களை மாற்றம் செய்துள்ளார்.

அதன் படி, பினாங்கு மாநில ம.இ.கா தலைவராக வழக்கறிஞரும், பாகான் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா சார்பாக போட்டியிட்டு தோல்வி கண்டவருமான கருப்பண்ணன் நியமிக்கப்பட்டார்.

அதே நேரத்தில், பேராக் மாநிலத்தின் தலைவராக ஜி.ராஜூவிற்கு பதிலாக, வழக்கறிஞர் டத்தோ ஆர்.கணேசன் நியமிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, மலாக்கா மாநில மஇகா தலைவராக டத்தோ எம்.எஸ்.மகாதேவனையும், பகாங் மாநில தலைவராக தேவேந்திரனுக்குப் பதிலாக ஆர்.குணசேகரனையும் நியமித்தார்.

பின்னர், கெடா மாநில ம.இ.கா தலைவராக இருந்த எஸ்.ஆனந்தனை நீக்கம் செய்து, தானே கெடா மாநில ம.இ.கா தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

மத்திய செயற்கழுவில் ஏற்படுத்திய மாற்றங்கள்

மாநில ம.இ.கா தலைமைத்துவத்தில் பல அதிரடி மாற்றங்களை  செய்த பழனிவேல், மத்திய செயற்குழுவையும் விட்டு வைக்கவில்லை.

மஇகா வின் முன்னாள் துணைத்தலைவர் எஸ்.வீரசிங்கம்,  முன்னாள் கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் டி.மாரிமுத்து மற்றும் முன்னாள் பேராக் மாநில மஇகா தலைவர் ஜி.ராஜூ ஆகியோரை கடந்த மாதம் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கி,அந்த மூன்று மூத்த உறுப்பினர்களுக்குப் பதிலாக, ஜோகூர் மாநிலம் காஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்யாநாதன், மலாக்கா மாநிலம் காடெக் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மகாதேவன் மற்றும் நெகிரி செம்பிலான் ஜெரம் பாடாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எல்.மாணிக்கம் ஆகியோரை நியமித்தார்.

இந்நிலையில், பழனிவேலின் அதிரடி மாற்றங்கள் கடந்த வாரம் உச்சக் கட்டத்தை எட்டியது.

முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரியை மத்திய செயலவை உறுப்பினர் நியமன பதவியிலிருந்து நீக்கி, அவருக்கு பதிலாக கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகன் சுந்தர் சுப்ரமணியத்தை பழனிவேல் மத்திய செயலவை உறுப்பினராக நியமித்தார்.

மற்றொரு நியமன உறுப்பினரான உஷா நந்தினிக்கு பதிலாக கட்சியின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதனை மத்திய செயலவை உறுப்பினராக பழனிவேல் நியமித்தார்.

இந்த மாற்றங்கள் ம.இ.கா வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தின.

அடுத்த குறி சரவணன்?

தலைமைத்துவ மாற்றம் வேண்டும் என்று கூறி தற்போது ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் சுப்ரமணியத்துடன் சேர்ந்து பழனிவேலுக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சரவணன் தான் பழனிவேலின் அடுத்த குறியாக இருக்கிறார்.

கடந்த வாரம் சரவணன், கூட்டரசுப் பிரதேச ம.இ.கா கிளைத்தலைவர்களுடன் டாக்டர் சுப்ராவை கோலாலம்பூரிலுள்ள ஒரு பிரபல விடுதியில் சந்தித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த சந்திப்பில், கட்சியில் தலைமைத்துவ மாற்றம் கட்டாயம் தேவை என்று விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த சந்திப்பில், சுகாதாரத்துறை என்பது அமைச்சரவையில் மிக முக்கியமான ஒரு துறை, பிரதமர் நஜிப், சுப்ராவை அந்த துறையில் நியமித்திருப்பதிலிருந்தே சுப்ராவின் தலைமைத்துவத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் சரவரணன் கூறியுள்ளார்.

ம.இ.கா சட்டவிதிப்படி, மாநில தலைமைத்துவத்திற்கு தேர்தல் நடைபெறாது. அதனால் தேசியத் தலைவரின் நியமனத்தை வைத்து தான் மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர். மாநிலத் தலைவர்களை நியமிப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் தேசியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது.

எனவே, சரவணன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூட்டரசுப் பிரதேச தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.