ஜூலை 30 – கோலக் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 27 ஜூலை 2013ஆம் நாள் ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் ‘தமிழ் விழா 2013’ நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தியது.
பட்டிமன்றம், ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தேறிய இந்நிகழ்வில் ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு வருகையாளராக ஓம்ஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் அறங்காவலருமான செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பி.தியாகராஜன் கலந்து சிறப்பித்தார்.
தமிழ்க் கணினி பங்களிப்பிற்கு கௌரவிப்பு
இந்த ‘தமிழ் விழா 2013’இன் சிறப்பு அங்கமாக, மலேசியாவில் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் தங்களின் பங்களிப்பை வழங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
முரசு மென்பொருள் உருவாக்கத்திற்கு பாடுபட்டவரும், செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பிற்கு காரணமானவரும் மேலும் தமிழ் விசைப்பலகை நிர்ணயத்திற்கு முக்கிய பங்காற்றியவருமான முத்து நெடுமாறனுக்கு தமிழ் விழா 2013இல் சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓம்ஸ் தியாகராஜன், முத்து நெடுமாறனுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
தமிழ்க் கணினி உலகுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாலா பிள்ளை, சிவகுருநாதன் சின்னையா ஆகியோருக்கும் இந்த நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது.
சிவகுருநாதன் சின்னையா வெளிநாட்டில் இருப்பதாக அவரது சார்பாக அவரது மாமனாருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
பட விளக்கம்:-
1. ஓம்ஸ் தியாகராஜன் முத்து நெடுமாறனுக்கு கௌரவிப்பு செய்கின்றார்.
2. தமிழ்க் கணினி பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டவர்களுடன் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்க பொறுப்பாளர்கள்.