பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 – ம.இ.கா தேசிய தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் போட்டி தேவையில்லை என்று மத்திய செயலவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மலேசியா கினி இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில், ம.இ.காவில் தற்போது சிறந்த தலைவர்கள் இருப்பதாகவும், அமைச்சரவையிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும் சுந்தர் கூறியுள்ளார்.
மேலும், கட்சியில் தலைமைத்துவம் சரியாக இருப்பதால் அதில் மாற்றங்கள் தேவையில்லை என்று கூறிய அவர், கட்சி சில ஆண்டுகளாக இழந்து விட்ட மக்களின் ஆதரவைத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.
“கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ம.இ.கா ஒரு மோசமான நிலையை அடைந்தது. அதன் பின் கடந்த 2010 ஆம் ஆண்டு தலைவர் பதவியை ஏற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இழந்த இந்திய சமுதாயத்தின் ஆதரவைப் பெற கடுமையாகப் பாடுபட்டுவருகிறார்”
“அதே நேரத்தில், கட்சியின் துணைத்தலைவரும், சுகாதாரத்துறைத்துறை அமைச்சருமான டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். எனவே அவர்கள் இருவரும் தங்கள் ஆற்றலை நிரூபிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று சுந்தர் கூறியுள்ளார்.
இதனிடையே, ம.இ.கா மத்திய செயலவைக்கு தாம் நியமிக்கப்பட்டது முறையற்றது என்று கூறப்படும் விமர்சனங்கள் குறித்து கருத்துரைத்த சுந்தர், “இது முறையற்றது என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியின் தலைமைச் செயலாளர் இது குறித்து தெளிவாக விளக்கமளித்துவிட்டார். ம.இ.கா சட்டவிதிகளின் படி, இப்படியொரு நியமனத்தை செய்ய தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு” என்று கூறியுள்ளார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் ம.இ.கா மத்திய செயலவைக்கு தான் போட்டியிடப்போவதாகவும் சுந்தர் உறுதியளித்துள்ளார்.