ஆக. 2- இங்கிலாந்து நாட்டின் இந்திய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியினரான குமார் அய்யர் என்பவரை நேற்று இங்கிலாந்து அரசு நியமனம் செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் வர்த்தக உறவுகளின் முக்கியத்துவம் கருதி இந்தப் புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, இந்தியாவின் மேற்குப் பகுதிகளுக்கான உதவி ஹை கமிஷனர் பதவியையும் இவர் வகிக்க இருக்கின்றார்.
வரும் 5ஆம் தேதி முதல் மும்பை நகரில் இந்தப் பணிகளை இவர் தொடருவார் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மூலதன சந்தை குறித்த துறையிலும் மற்றும் மைக்ரோ எகனாமிக்ஸ் பிரிவில் இளங்கலை மாணவர்களுக்கும் இவர் வகுப்புகள் எடுத்துவந்தார்.
இதுமட்டுமின்றி, கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து நாட்டின் கருவூலத்திலும், உயர்மட்ட குழுவிலும் இவர் தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளார்.
இந்தியாவில் பணி புரியவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குமார் அய்யர், இரு நாடுகளுக்கிடையே கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூகப் பண்புகள் செழித்து வளர தான் சிறந்த பங்காற்ற விருப்பதாகவும் தெரிவித்தார்.