Home One Line P2 அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழையும் இந்தியர்கள் யார்?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழையும் இந்தியர்கள் யார்?

758
0
SHARE
Ad

“அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் யார்?” என்ற தலைப்பில் கடந்த 09 December 2020-நாள் செல்லியல் காணொலி தளத்தில் பதிவேற்றம் கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்

அமெரிக்க நாடாளுமன்றம் இரண்டு அவைகளாகச் செயல்படுகிறது. 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவை, கீழ் அவையாகவும், 100 செனட்டர்களைக் கொண்ட செனட் மன்றம் மேலவையாகவும் செயல்படுகிறது.

இதில் செனட் மன்றத்திற்கு 2016-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்தான் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர். தற்போது அவர் துணையதிபராகி விட்டதால் இந்திய வம்சாவளியினர் யாருமே செனட்டராக இல்லை.

#TamilSchoolmychoice

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவைக்கு 4 இந்தியர்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நாடாளுமன்றத்திலுள்ள இந்திய உறுப்பினர்கள் பொதுவாக “சமோசா குழுவினர்” (Samosa Caucus) என அழைக்கப்படுகின்றனர். இந்தியர்களால் பரவலாக விரும்பிச் சாப்பிடப்படும் சமோசா பலகாரத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயரால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நால்வரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும் சில இந்தியர்களும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

குடியரசுக் கட்சியின் சார்பிலும் சில இந்தியர்கள் போட்டியிட்டனர். எனினும் அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் தமிழர்கள் என்பது நமக்கும் பெருமை தரும் இன்னொரு விஷயம்.

அந்த நால்வரும் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

இல்லினோய்ஸ் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி

2017 முதல் இல்லினோய்ஸ் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுகிறார் ராஜா கிருஷ்ணமூர்த்தி (படம்). தமிழரான இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நகர்களில் ஒன்றான சிகாகோ நகரின் ஒரு பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

புதுடில்லியில் 1973-இல் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியின் முழுப்பெயர் சுப்பிரமணியன் ராஜா கிருஷ்ணமூர்த்தி.  3-மாதக் குழந்தையாக  அமெரிக்காவுக்கு தந்தையோடு குடியேறியவர். தனது மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற கிருஷ்ணமூர்த்தியின் தந்தையார் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றார். பின்னர் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் பணியாற்றினார் ராஜா கிருஷ்ணமூர்த்தியின் தந்தையார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி

அமெரிக்காவின் புகழ் பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற ராஜா கிருஷ்ணமூர்த்தி பின்னர் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றார். அரசியலில் நுழைந்து தற்போது இரண்டாவது தவணைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.

47 வயதே ஆன ராஜா கிருஷ்ணமூர்த்தி எதிர்காலத்தில் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்கு பெற்ற அமெரிக்க இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்வார் என கணிக்கப்படுகிறது.

வாஷிங்டனில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமிளா ஜெயபால்

பிரமிளா ஜெயபால்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமிளா ஜெயபாலும் (Pramila Jayapal) தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும் ஜனநாயகக் கட்சியின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சியாட்டல் நகரின் ஒரு பகுதியைப் பிரதிநிதிக்கும் இவர் 2017 முதல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

கலிபோர்னியா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமி பெரா

அமி பெரா (படம்) என சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர் அமெரிஷ் பாபுலால் (Amerish Babulal “Ami” Bera) ஜனநாயகக் கட்சியின் சார்பில் 2013-ஆம் ஆண்டிலிருந்து கலிபோர்னியா மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

55 வயதான அமி பெரா இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மூத்தவர். 5-வது தவணையாக இவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கலிபோர்னியா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரோ கன்னா

ரோ கன்னா

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 44 வயதான ரோ கன்னா (Ro Khanna) கலிபோர்னியா மாநிலத்திலிருந்து 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவரது தொகுதியில் இவர் தோற்கடித்த குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரிதேஷ் தாண்டனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது சுவாரசியமான விஷயம்.

2020 அமெரிக்கத் தேர்தலில் பலம் பெற்ற இந்தியர்கள்

2020 அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அந்த நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினரின் பலத்தைக் காட்டும் தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது.

அமெரிக்கத் துணையதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட நான்கு இந்தியர்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைகின்றனர். குடியரசுக் கட்சியின் சார்பில் யாரும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் சில இந்தியர்கள் அந்தக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கின்றனர்.

அமெரிக்க செனட் மன்றத்தின் 100 செனட்டர்களில் இந்தியர்கள் யாரும் இப்போதைக்கு இல்லை. என்றாலும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் மேயின் மாநில செனட்டராக சாரா கிடியோன் என்பவர் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

இனிவரும் ஆண்டுகளில் அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் வாக்காளர் பலமும், பங்களிப்பும் மேலும் பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்