மதுரை : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவேன் என கமல்ஹாசன் அறிவித்தார்.
நேற்று டிசம்பர் 13-ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி மதுரையிலிருந்து தனது பிரச்சாரத்தைக் தொடக்கினார் கமல்ஹாசன்.
திறந்த வாகனத்தில் அவர் சென்றபோது தெருக்களில் மக்கள் திரளாகக் கூடி அவருக்கு வரவேற்பளித்தனர். ஆனால் கூடிய கூட்டம் கமல்ஹாசன் என்ற நடிகரைப் பார்ப்பதற்காகக் கூடினரா அல்லது மக்கள் நீதி மய்யம் தலைவர் என்ற அரசியல் தலைவரைப் பார்க்கக் கூடினரா என்பது தேர்தல் வாக்களிப்பின்போதுதான் தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மதுரையைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என்ற முழக்கத்தையும் மதுரை மக்களிடையே கமல்ஹாசன் முன்வைத்துள்ளார்.
எம்ஜிஆரின் ஆட்சியைத் தருவோம் என்ற புதிய முழக்கத்தையும் கமல்ஹாசன் தனது முதல் கட்டப் பரப்புரையில் முழங்கியிருக்கிறார்.
இதற்கிடையில் எம்ஜிஆர் செய்ய முயற்சி செய்ததைப் போன்று மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என கமல் கூறியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், எம்ஜிஆர் திருச்சியைத்தான் தமிழகத்தின் தலைநகராக மாற்றுவேன் என்று கூறினாரே தவிர, மதுரையைத் தலைநகராக்குவோம் என எப்போதும் கூறியதே இல்லை.
மேலும் தனது பரப்புரைகளின்போது கமல் முகக் கவசம் அணியாமல் உரையாற்றியதும் கடும் கண்டனங்களை ஊடகங்களில் தோற்றுவித்திருக்கிறது.