கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – ஜோகூரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் அறையில் சுற்றுலா வந்த பௌத்தர்கள் புத்த படமொன்றை வைத்து தியானம் செய்வதைப் போன்ற காணொளி ஒன்று நேற்று முன்தினம் யூ டியூப் (Youtube) வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பௌத்தர்களின் இந்த செயல் இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளதாக ஜோகூர் இஸ்லாமிய மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“அந்த குழுவினர் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு மலேசிய சட்டங்கள் தெரிந்திருந்திருக்க வேண்டும். இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. ஆனால் நடந்து விட்டது காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லை. இஸ்லாமை அவமதித்த குற்றத்திற்காக நடப்பு சட்டங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய முடியாத வகையில் தடை செய்ய வேண்டும்” என்று அம்மன்றத்தின் ஆலோசகர் நோ காடுட் கூறியதாக ‘பெரித்தா ஹரியான்’ பத்திரிக்கை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 85 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி ‘Surau dijadikan tokong?” (இஸ்லாம் தொழுகை நடத்தும் இடத்தில் பௌத்தர்கள்?) என்ற தலைப்போடு வலைத்தளங்களில் உலா வருகிறது. ஒரு சிறிய கட்டிடத்திற்குள் புத்தர் படம் ஒன்று வைக்கப்பட்டு அதன் முன்னர் பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வது போல் அக்காணொளியில் காட்சிகள் உள்ளன.
மேலும், அக்காணொளியின் தொடக்கத்தில் ‘சுராவ் களங்கப்பட்டுள்ளது’ என்றும், இடம் ஜோகூர் கோத்தா திங்கி, தஞ்சோங் செடிலி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.