Home அரசியல் “வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி எப்படி? இதற்கு அவசரகால சட்டத்தை காரணம் கூற முடியாது” – லிம்...

“வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி எப்படி? இதற்கு அவசரகால சட்டத்தை காரணம் கூற முடியாது” – லிம் கருத்து

628
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – அவசரகால சட்டம் அகற்றப்பட்டதால் தான் நாட்டில் குற்றச்செயல்களும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக காவல்துறை காரணம் கூறலாம். ஆனால் குற்றவாளிகளின் கைகளின் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் குறித்து காவல்துறை விளக்கமளித்தே ஆக வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு வழிப்பறி கொள்ளையரிடமும் துப்பாக்கி இருக்கிறது. இது போன்ற குற்றவாளிகளை காவல்துறையால் மட்டுமே அடையாளம் கண்டு நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்றும் லிம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“அவசரகால சட்டம் அகற்றப்பட்டதால் விடுதலை செய்யப்பட்ட 2,600 குண்டர்களால் தான், நாட்டில் 2 லட்சத்து 60,000 குண்டர்கள் உருவாகி சுதந்திரமாக தற்போது வீதிகளில் உலவி வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கடந்த சில மாதங்களில் மட்டும் தினமும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவமாவது நாட்டில் நடக்கிறது. தொழிலதிபர் முகமட் லத்தீப் மன்ஸோர் வழிப்பறி கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். ஆனால் உள்துறை அமைச்சகம் இந்த குற்றங்களுக்கெல்லாம் வெறும் அதிருப்தியை மட்டும் தெரிவித்துவிட்டு அவசரகால சட்டத்தைக் காரணம் கூறுகிறது” என்று லிம் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு ஜசெக மத்திய செயற் குழு அவசரகால கூட்டம் ஒன்றை திங்கள் இரவு ஏற்பாடு செய்ததாகவும், அதில் நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் அதைத் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் லிம் கூறியுள்ளார்.

மத்திய செயற்குழு கூடி விவாதித்து, ஜசெக தேசிய உதவித் தலைவர் தெரேசா கோக் தலைமையில் ஜசெக குற்றத் தடுப்பு நடவடிக்கைக் குழு (DAP Crime Action Taskforce – CAT) நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கும் என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, சமீபகாலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களை ஒடுக்க அவசரகால சட்டம் போன்று எதுவும் தேவையில்லை. காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்து குற்றங்களுக்கு எதிராகப் போராடினாலே அதை ஒடுக்கி விடலாம் என்று லிம் தெரிவித்துள்ளார்.