இந்நிலையில் எழும்பூர் காவல் நிலையம் அருகில் உள்ள காசாமேஜர் சாலை ஜெரால் கார்டன் 2வது சந்திப்பில் உள்ள இலங்கை வங்கி மீது நேற்று மதியம் தாக்குதல் நடத்தப்பட்டது. 3 தளங்களை கொண்ட இந்த வங்கியின் தரை தளத்தில் கார் பார்க்கிங் இடமும்,வரவேற்பறையும் உள்ளது. முதல் தளத்தில் வங்கி அலுவலகம் உள்ளது. இங்கு 25க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பணி செய்து வருகின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முதலில் செயல்பட்ட இந்த வங்கி, அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன் எழும்பூர் காவல் நிலையம் அருகே மாற்றம் செய்யப்பட்டது. இங்கு பாதுகாப்பிற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கிக்குள் புகுந்த கும்பல் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சென்றுள்ளனர். மேலும், வயதான ஊழியர் ஒருவர் தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். வயதான உன்னை தாக்க மாட்டோம். மரியாதையாக விலகி சென்று விடு என்று எச்சரித்து அனுப்பி உள்ளனர். தற்போது, வங்கிக்குள் இருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் தாக்குதல் கும்பல் பற்றி துப்பு துலக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாக்குதல் கும்பலை பிடிக்க முயற்சி செய்யவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.