ஆகஸ்ட் 20 – பிளேக் பெர்ரி நிறுவனத்தின் நிர்வாகிகள் அந்த நிறுவனத்தை விற்பனைக்கு முன் வைப்பதாக அறிவித்துள்ளனர். ஒரு காலத்தில் விவேகக் கைத்தொலைபேசித்துறையில் கொடி கட்டிப் பறந்த அந்த கனடா நாட்டு நிறுவனத்தை ஆர்வமுடன் வாங்கக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த நிறுவனத்தை பிரித்தெடுத்து தனித்தனி நிறுவனங்களாக விற்பனை செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்திற்கு மதிப்பு கிடைக்கும் என்றும் மாறாக அந்த பிளேக் பெர்ரி நிறுவனத்தை ஒரே நிறுவனமாக விற்பனை செய்தால் வாங்கக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்றும் கருதப்படுகின்றது.
வாங்கக் கூடிய சாத்தியமுள்ள நிறுவனங்களில் மைக்ரோசோஃப்ட் நிறுவனமும் ஒன்றாகும். ஆனாலும் ஏற்கனவே, நோக்கியா கைத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ் இயங்குதளத்தை மைக்ரோசோஃப்ட் உருவாக்கியுள்ளதால் இந்த இரண்டு நிறுவனங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவே!
சாம்சுங், எச்டிசி மற்றும் லெனோவா போன்ற கைத்தொலைபேசி நிறுவனங்களும் பிளேக் பெர்ரி நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டக்கூடும். விவேகக் கைத்தொலைபேசித் தயாரிப்பில் பிளேக் பெர்ரி ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ள காரணத்தால் இந்த நிறுவனங்கள் பிளேக் பெர்ரி நிறுவனத்தை வாங்க ஆர்வம் கொள்ளலாம்.
பிளேக் பெர்ரி நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களால் வாங்கப்படும்போது சம்பந்தப்பட்ட விற்பனை ஒப்பந்தம் கவனமாக பரிசீலிக்கப்படும் என கனடா நாட்டு அரசாங்கமும் அறிவித்துள்ளது.
ஒட்டு மொத்த விற்பனை, கூட்டு ஒப்பந்தம், வியூக இணைப்புகள் போன்ற அம்சங்களை நோக்கமாக வைத்து பிளேக் பெர்ரி நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ என்ற அனைத்துல நிதி ஆலோசனை நிறுவனத்தை நியமித்துள்ளதாகவும் பிளேக் பெர்ரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாத நிதி அறிக்கையின்படி பிளேக் பெர்ரி நிறுவனம், 6.8 மில்லியன் விவேகக் கைத்தொலைபேசிகளை மட்டுமே ஏற்றுமதி செய்து 84 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பிளேக் பெர்ரி 10 என்ற புதிய ரக கைத்தொலைபேசியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தினாலும் அந்த ரக கைத்தொலைபேசிகள் 2.7 மில்லியன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.