சென்னை, ஆக. 23– தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் ‘மெட்ராஸ் கபே’ படம் இன்று தமிழ் நாட்டில் வெளியிடவில்லை. இந்த படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் எடுத்துள்ளனர்.
இந்தி பதிப்புக்கு ஏற்கனவே தணிக்கை குழு அனுமதி அளித்தது. தமிழ் பதிப்புக்கும் நேற்று அனுமதி கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் 70–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்தன.
மெட்ராஸ் கபே படத்தை திரையிட்டால் திரையரங்குகளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று வைகோ, சீமான் மற்றும் மாணவர் அமைப்புகள் எச்சரித்தன. இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் இன்று படத்தை வெளீஈஈஊ செய்ய மறுத்துவிட்டனர். வெளி மாநிலங்களில் திட்டமிட்டபடி இப்படம் வெளியானது
இந்த நிலையில் மெட்ராஸ் கபே படத்துக்கு வட மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளையும் ராஜீவ் காந்தியையும் முன் நிறுத்தியே இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் அமைதி ஏற்படுத்த ராஜீவ் காந்தி மேற்கொள்ளும் முயற்சிகளும் விடுதலைப்புலிகள் அவரை கொல்வது போன்றுமே காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. பிரபாகரனை வில்லனாகவும், ராஜீவ்காந்தியை கதாநாயகனாகவும் சித்தரித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார படமாக இதை தயாரித்து இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அவர்களும் மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய கோரி வட இந்தியா முழுவதும், தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மும்பையில் பாரதீய ஜனதா கட்சியினரும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டு மெட்ராஸ் கபே படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே படத்தின் படங்கள் மற்றும் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தார்கள்.
சென்னையில் மாணவர்கள் மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதற்கிடையில் ஜான் ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம் அல்ல என்றும் இப்படத்தை வெளியீடு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது தமிழ்நாடு முழுவதும் மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவது இல்லை என்று முடிவு எடுத்த தமிழ் உணர்வுள்ள திரையரங்கு அதிபர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்துக்கு உலகம் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றார்.
மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த சினிமா திரையரங்குகளிலும் திரையிட விடமாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஈழத் தமிழர்களின் ஈழ விடுதலையை கொச்சைப்படுத்தி ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை வெளியிடுவதை படத்தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும். இந்த படத்தை மீறி வெளியிட முயற்சித்தால் தமிழக வாழ்வு ரிமை கட்சியின் தொண்டர்கள் அதனை தடுத்து நிறுத்து வார்கள் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.