கோலாலம்பூர்,ஆகஸ்ட் 30 – எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா பள்ளியில் குளியலறைக்கு அருகே சிற்றுண்டி சாலை அமைத்து மாணவர்களை உணவருந்த வைத்தது ஒரு சிறிய பிரச்சனை. மற்ற பள்ளிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த பள்ளியில் மாணவர்களை நல்ல முறையில் ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்கிறார்கள் என்று துணைக் கல்வி அமைச்சர் II கமலநாதன் கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் ‘கல்வி சமப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய கமலநாதன், “நேற்றைய கணக்கீட்டின் படி நாட்டில் 10,094 பள்ளிகள் உள்ளன. தேசிய ஒருங்கிணைப்புக்கு உட்பட்டு 90 முதல் 95 சதவிகித பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன”
“ஏதாவது ஒரு பள்ளியோ, ஒரு நபரோ நமது கொள்கைகளுக்கு உட்படவில்லை என்றால், நாட்டின் ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகங்களையும் அதே போல் இருக்கும் என்று எண்ணிவிடக்கூடாது” என்று கமலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் முகமட் நாசிர் முகமட் நோர் மீது கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும், அது பற்றிய விசாரணை தற்போது நடைபெற்றுவருவதாகவும் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.