Home இந்தியா வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

2281
0
SHARE
Ad

நாகப்பட்டினம்,ஆக.30- நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக திருத்தலமாக வேளாங்கண்ணி திகழ்கிறது.

கீழை நாடுகளில் ‘லூர்து நகர்’என்ற பெருமையுடன் அன்னை மேரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8ந் தேதி ஆகும்.

#TamilSchoolmychoice

இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14dgjshமாதா உருவம் பொறித்த வண்ணக் கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் 6.35 மணிக்கு பேராலயம் அருகில் உள்ள கொடி கம்பத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஊர்வலத்தின் போது, கொடி காற்றில் விரிந்து பறக்கும் போதெல்லாம் பக்தர்கள் உற்சாகமாக கைத்தட்டி மகிழ்ந்தனர். பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடி கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்ததும், கொடி 6.50 மணிக்கு ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்தின் போது, பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், துணை அதிபர் ஆரோக்கியதாஸ், ஆலய பொருளாளர் தார்சிஸ்ராஜ் மற்றும் மறை மாவட்ட பங்குத்தந்தையர்கள் பிரார்த்தனை செய்தனர். கம்பத்தில் கொடி ஏற்றப்பட்ட போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் உணர்ச்சி பொங்க பக்தி பரவசத்துடன் `ஆவே மரியே` என உள்ளம் உருக கூறினர்.

கம்பத்தின் உச்சியை கொடி அடைந்ததும், மாதா உருவம் பொறிக்கப்பட்ட வண்ண பலூன்களும், புறாக்களும் வானில் பறக்க விடப்பட்டன. பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சுரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

06IN_VELANKANNI_774575gதொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்க்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. பேராலய குருக்கள் அலுவலகத்தின் அருகில் இருந்து சிறிய சப்பரம் ஊர்வலம் புறப்பட்டது.

சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. அந்த சப்பரத்தை பெண்கள் சுமந்து சென்றனர். கொடியேற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் முனுசாமி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்பிரமணி, தஞ்சை டி.ஐ.ஜி. (பொறுப்பு) அமல்ராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன்,

முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜுலியட்அற்புதராஜ், பேராலய பங்கு தந்தை மைக்கேல், அடிகளார், உதவி பங்கு தந்தைகள் ஆரோக்கிய சுந்தரம், ஆரோக்கியதாஸ், பேராலய பொருளாளர், தாசிஸ்ராஜ் உள்ளிட்ட பங்கு தந்தையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவிழா நாட்களில் பேராலயம், பேராலய விண்மீன் ஆலயம், பேராலயம் மேல்கோவில் மற்றும் கீழ் கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படுகிறது.

மேலும், சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர் பவனியும் நடைபெறுகிறது.

இதைதொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.