ஜெயம்கொண்டம், செப். 5 -அக்டோபர் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் செவ்வாய்கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (படம்) தெரிவித்துள்ளார்.
பெங்களூர் விண்வெளி மைய சந்திரயான் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேற்று ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:–
நான் இளங்கலை படித்து முடித்தவுடன்தான் சென்னையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது அமெரிக்க உள்பட பல நாடுகளுக்கு சென்று எனது கண்டு பிடிப்புகளை பற்றி பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் சரியான நேரம் சரியான திசையை நோக்கி நமது இலக்குகள் சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
சந்திரன் வினாடிக்கு 1 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று கொண்டுள்ளதால் 4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை அடைய சரியான திசையை, சரியான நேரத்தை கணக்கீடு செய்ததால் சந்திரனை அடைந்து சந்திரயான் இந்திய கொடியை நாட்டியது.
மாணவர்கள் இதேபோல் சரியான இலக்கை அடைய முன்வர வேண்டும். மாணவர்களுக்கு தற்போது படிப்புதான் முக்கியம். மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவை விட இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இருப்பதால் இந்தியா முதலிடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெங்களூரில் உள்ள விஷ் வேஷ்ராய்யா அருங்காட்சியகத்தை நான் ஒரு முறை சுற்றிப் பார்த்தபோது ஏராளமான கண்டுபிடிப்புகள் என் மனதை கவர்ந்தன. இந்த அருங்காட்சியகத்தில் எனது கண்டுபிடிப்பும் இடம் பெற வேண்டும் என்று அன்றைய கனவு 30 வருடங்களுக்கு பிறகு எனது சந்திரயானின் மாதிரி வடிவம் இடம் பெற்றிருக்கிறது.
அப்போது எனது பெயரோடு சேர்ந்து எனக்காக பாடுபட்ட எனது தந்தையாரின் பெயருடன் மயில்சாமி அண்ணாத்துரை என்று வரலாற்றில் இடம்பிடித்து எனது தந்தையின் கனவும் நினைவானது. சந்திரனில் மட்டும் நமது இலக்கு இல்லாமல் அதையும் தாண்டி செவ்வாய் கிரகத்திற்கு செல்லவும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் மாணவர்களிடையே பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தற்போது செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் செவ்வாய்கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பப்படும். செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தை அடைய 9 மாதங்கள் ஆகும். அதனால் அந்த பணி தீவிரமாக கணிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்று கூறினார்.