செப்டம்பர் 7 – ஆஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்பார்த்தபடி தோல்வியடைந்தது.
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து அதன் தலைவரான டோனி அப்போட் புதிய பிரதமராகப் பதவியேற்கின்றார்.
பதவியிழக்கும் நடப்பு பிரதமரான கெவின் ரூட் கடந்த ஜூன் மாதம்தான், அப்போதைய ஆளும் கட்சியைக் காப்பாற்றும் நோக்கில், ஜூலியா கில்லர்ட்டுக்கு பதிலாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி பதவியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஆட்சியின் கீழ் பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டில் மக்களிடையே அதிருப்தியே நிலவி வந்தது.
கடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கெவின் ரூட் பின்னர் 2010ஆம் ஆண்டில் அதே தொழிலாளர் கட்சியால் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கில்லர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், ஜூலியா கில்லர்ட்டின் ஆட்சியிலும் குளறுபடிகள் தொடர, ஜூலியாவும் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்டு மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதவாக்கில் கெவின் ரூட் பிரதமராகப் பதவியேற்றார்.
புதிய பிரதமர் டோனி அப்போட்…
தேர்தலில் வெற்றி பெற்று, புதிதாகப் பிரதமராகப் பதவியேற்கும் டோனி அப்போட் முன்னாள் குத்துச் சண்டை வீரராவார். அதேவேளையில், மிகச் சிறந்த மாணவர்களுக்கே வழங்கப்படும் ரோட்ஸ் (Rhodes Scholar) உபகாரச்சம்பளம் பெற்று பல்கலைக் கழகத்தில் படித்தவர். கிறிஸ்துவ மத போதகராகப் பயிற்சியும் எடுத்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் நிலைத்தன்மையை நிலை நிறுத்துவது, வரிகளைக் குறைப்பது, அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற அம்சங்களை முன்வைத்து டோனி அப்போட் பிரச்சாரம் செய்தார். அதில் வெற்றியும் பெற்றார்.
இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் அப்போட் தலைமையிலான லிபரல்-தேசியக் கட்சி (கன்சர்வேடிவ்) கூட்டணி 52.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 150 தொகுதிகளில் குறைந்தது 88 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
30 தொகுதிகள் பெரும்பான்மையில் டோனி அப்போட் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சிறுபான்மை அரசாங்கங்களையே பார்த்து வந்த ஆஸ்திரேலியா நாட்டில் இப்போதுதான் முதன் முறையாக பெரும்பான்மையாக தனித்து வெற்றி பெற்ற கூட்டணி ஆட்சி அமைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.