Home நாடு “மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!

“மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!

839
0
SHARE
Ad

kulasekaranசெப்டம்பர் 8 – மலேசியக் கல்வித் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிமுகப்படுத்தியுள்ள மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தினால் பள்ளிகளில் தமிழ் மொழிக்கு ஆபத்து நேருமென ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான, ஜனநாயக செயல் கட்சியின் (ஜ.செ.க.) தலைவர்களில் ஒருவருமான மு.குலசேகரன் எச்சரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த கல்விப் பெருந்திட்டம் தொடர்பில் பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் குலசேகரன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“தமிழும் சீனமும் உலகின் மூத்த மொழிகள். இவ்விரண்டு மொழிகளுமே அவற்றின்  தாயகமான இந்தியா, சீனா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே பள்ளிகளில் முழு நேரமாகப் போதிக்கப் படுகின்றன.

இவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகவும் விளங்குகின்றன. இது அவ்விரு மொழிகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்துடன், மலேசிய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது நாள் வரையில் கடைப் பிடித்து வந்த வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கோட்பாட்டையும் நன்கு பிரதிபலிக்கிறது.

கடந்த 200 ஆண்டுகளாக இந்நாட்டில் வேரூன்றிப் படர்ந்திருக்கும் இவ்விரு மொழிகளுக்கும் இப்பொழுது மலேசிய கல்விப் பெருந் திட்டம் வழி பங்கம் வரப்போகிறது.

இந்த  மலேசிய கல்விப் பெருந் திட்டத்தில் மலாய் மொழிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டி அதனின் கற்பித்தல் நேரம் வாரம் 570 நிமிடங்கள் என ஆகி அதனால் தமிழ்ப் மொழிப் கற்பித்தல் வெறும் 300 நிமிடங்களுக்கு குறைக்கப்படுகிறது. அதோடு அரசாங்கத்தின் ஒரே மொழிக் கொள்கைக்கு இது முதல் கட்ட நடவடிக்கையாக  அமையவிருக்கிறது என்பதனை பலர் அறியாமலிருக்கின்றனர்.

இது தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையை பாதிப்பதோடல்லாது நாளடைவில் தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் படிப்படியாக மூடுவிழா காண வழி கோலும் திட்டமாகும்.

தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏன் இன்னும் மௌனம்!

இந்தப் பெருந்திட்டத்தை அமுலாக்குவதற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதனை நடைமுறைப் படுத்தியே தீருவோம் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறியிருப்பது மேலும் இதற்கு வலு ஊட்டுவதாக அமைந்துள்ளது.

இதை மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றமும் (டோங் ஸோங்), சீனப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றமும் கடுமையாக எதிற்கும் வேளையில் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றம் ஒப்புக் கொள்வது போல மௌனம் சாதிப்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியிலும், தமிழ்மொழியை காப்பதிலும் அதிக அக்கறைக் காட்ட வேண்டிய தலைமை ஆசிரியர் மன்றம் தனது எதிர்ப்பையோ கருத்தையோ கூறாதிருப்பது தமிழ் மொழியின் மேல் அவர்களுக்கிருக்கின்ற  அறியாமையையும் , அக்கறையின்மையும் காண்பிக்கிறது.

மலேசிய நாட்டில் எத்தனையோ தமிழ் மொழி சார்ந்த அரசு சாரா இயக்கங்கள் இருந்தும், தமிழ் அறவாரியமும், சுவாரம் தலைவர் கா. ஆறுமுகமும்  தவிர வேறு யாரும் இதில் அக்கறை கொள்ளாதது மிகவும் வேதனை அளிக்கிறது. மலேசிய இளைஞர் மணிமன்றம், மலேசியத் திரவிடர் கழகம், மதியழகன், சம்பந்தன் பஞ்சமூர்த்தி ஆகியோருடன் உள்ள ஐபிஎப் கட்சிகள், தனேந்திரனின் மக்கள் கட்சி,   ,கேவிஎஸ்ஸின் பிபிபி கட்சி, கிம்மா இயக்கம்இவைகள் யாவும் இந்தப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்ததாகத் தெரியவில்லை. செனட்டர் பதவிக்கும், மானியங்களுக்கும் பிரதமர் நஜீப்பை நாடும் இவர்கள் தமிழ் மொழி ஓரம்கட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்கின்றார்கள் என்பது புரியவில்லை? நாட்டில் என்ன நடக்கின்றது என்று இவர்களுக்கு தெரியவில்லை போலும்.

ம.இ.காவின் நிலைப்பாடு என்ன?

அரசியல் கட்சியாக இருந்து கொண்டு ஆட்சியில் பங்கு கொண்டுள்ள மஇகாவோ தனது திருவாயை இதுவரை திறக்கவில்லை. தமிழ் மொழி இந்த நாட்டில் நிலைத்திருப்பது ம.இ.காகாரர்களுக்கு உடன் பாடு இல்லை போலும். ம.இ.கா என்கின்ற கட்சி இது நாள் வரை தமிழ் மொழியைக் காப்போம் தமிழ்ப் பள்ளிகள் அழியவிடமாட்டோம் என்றெல்லாம் வாய் கிழிய கத்தி வந்துள்ளனர். இப்பொழுது தமிழுக்கும், அதனை வளர்க்கும் பள்ளிக்கும்  ஆபத்து என்ற நிலையில் மௌனமாகிவிட்டனர்.

தமிழ் சார்ந்த அமைப்புகளும், தமிழ் மேல் பற்றுள்ள அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தேசிய மொழியாகிய மலாய் மொழி முன்னிலைப்படுத்த வேண்டுமென்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், அதே வேளையில் அது தாய்மொழிப் பாடத்தில் ஊடுருவித்தான் அதனைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து அதற்கு தகுந்த வழி காணவேண்டும் என்பது எனது கருத்து.”

-இவ்வாறு குலசேகரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.