Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா! எழுத்தாளர்கள் நவீன யுகத்திற்கு மாற...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா! எழுத்தாளர்கள் நவீன யுகத்திற்கு மாற வேண்டும் – கமலநாதன் சிறப்புரை

639
0
SHARE
Ad

kamalanathanகோலாலம்பூர், செப் 9 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா, நேற்று மாலை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. அதில் சிறுகதைப் போட்டி, புதுகவிதை, மரபுக்கவிதை, கட்டுரைப்போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு நடைபெற்றது. தமிழகம் அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் மலேசிய துணைக் கல்வி அமைச்சரான பி.கமலநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கமலநாதனின் உரை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் நவீன யுகத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று உலகில் எல்லாரும் இணையத் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதன்வழிதான் எல்லா புத்தகங்களையும் செய்திகளையும் படித்து தெரிந்து கொள்கிறார்கள்.எனவே எழுத்தாளர்கள் கணினி யுகத்திற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.”

“எழுத்தாளர் சங்கம் பொன்விழா கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டு காலத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பலநூறு புத்தகங்களை எழுதியிருக்கலாம். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் உட்பட பிறமொழிப் புத்தகங்கள் இருக்குமா? என்பது சந்தேகமே”

“இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கணினியைப் பயன்படுத்துகிறார்கள். கையடக்கக் கணினியில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அதில் உள்ளவற்றைத் தான் இன்றைய தலைமுறையினர் வாசித்து வருகிறார்கள். எனவே எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை இணையத்தளத்தில் பதிப்பிக்க வேண்டும். தேசிய மொழிக்கும், மலாய் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் டேவான் பஹாசா டான் புஸ்தாகா இருப்பது போல், ஓர் அறவாரியத்தை அல்லது அமைப்பைத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரசாங்க ஆதரவுடன் அமைக்கும் திட்டம் உள்ளது. அதை, எப்படி உருவாக்கம் செய்வது என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்”

“எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுக்குத் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடங்களாக எடுக்கும் மாணவர்களுக்குத் தமிழ்நாட்டில் சிறப்பான பல்கலைக்கழகத்தின் தேர்வுத்தாள்கள் இங்கு அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்கலைக்கழக அங்கீகாரம் தமிழ் மாணவர்களுக்குக் கிடைக்கும்.” இவ்வாறு கமலநாதன் தமது உரையில் கூறினார்.