Home அரசியல் இந்துக்களின் ஆலயமா? வழிபாட்டுத் தலமா? முடிவு செய்வது யார்? தெங்கு அட்னானா?

இந்துக்களின் ஆலயமா? வழிபாட்டுத் தலமா? முடிவு செய்வது யார்? தெங்கு அட்னானா?

882
0
SHARE
Ad

tengku adnanசெப்டம்பர் 10 – தலைநகரின் தங்க முக்கோணப் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் ஓர் ஆலயமல்ல (temple) வழிபாட்டுத் தலம்தான் (shrine) என புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வெடியொன்றைக் கொளுத்திப் போட்டு ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு மேலும் நெருப்பை மூட்டியிருக்கின்றார் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான்.

#TamilSchoolmychoice

உண்மையான பிரச்சனையின் தீவிரத்தை திசை திருப்பும் நோக்கில் தெங்கு அட்னான் கூறியிருக்கும் இந்தக் கருத்து இந்துக்களின் மத நம்பிக்கைகளையும், பாரம்பரியத்தையும், சரியாகப் புரிந்து கொள்ளாமல் விடுக்கப்பட்ட ஓர் அறிக்கை என்பதோடு, இந்த தருணத்திற்கு தேவையில்லாத ஒன்றுமாகும்.

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தில் மாநகரசபை மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி இப்போதைக்கு நாம் விவாதிக்க வேண்டியதில்லை. அது குறித்து ஏற்கனவே ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் மக்கள் மேடையின் முன் வைக்கப்பட்டுவிட்டன.

இப்போதைய நமது பிரச்சனை என்னவென்றால், ஓர் இடம் ஆலயமா அல்லது வழிபாட்டுத் தலமா என்பதை யார் முடிவு செய்வது? மலேசிய இந்து சங்கமா? அல்லது இதற்கென்று ஓர் அமைப்பை உருவாக்குவோமா? அல்லது அந்த நிர்ணயிக்கும் பொறுப்பை நாம் எல்லோரும் சேர்ந்து மாண்புமிகு தெங்கு அட்னானிடம் ஒப்படைத்து விடுவோமா? என்பதுதான்!

ஆலயம் என்றால் என்றால் அது உயர்ந்தது, மதிப்பு மிகுந்தது என்பது போலவும், வழிபாட்டுத் தலம் என்றால் அது தரம் குறைந்தது என்பது போலவும் அட்னான் கருத்து கூறியிருக்கின்றார்.

பக்தி என்பது தரம் பிரித்துப் பார்க்கப்படுவதல்ல! உணவகங்களுக்கு, மாநகரசபை A, B, C என தர சான்றிதழ் தருவதுபோல், இது ஆலயம், இது வழிபாட்டுத் தலம் என நாம் பிரித்துப்பார்த்து  தரச்சான்றிதழ் வழங்க முடியாது.

எது ஆலயம்? எது வழிபாட்டுத் தலம்?

Muniswarar-Kaliamman-temple-featureசிலை வழிபாடு என்பதும், அதிலும் உருவ வழிபாடு என்பதும் இந்து மதத்தின் ஆதாரமும் அடிப்படையும் ஆகும்! இதில் எது ஆலயம் எது வழிபாட்டுத் தலம் என்று என்றைக்கும் இந்துக்கள் வேறுபடுத்தி பார்த்ததில்லை. எந்த ஓர் இடத்திலும் பக்திதான் பிரதானமாக இருக்கும்!

அரச மரத்தையும் இந்து மதத்தினர் வழிபடுவார்கள்! ஆலமரத்தையும் வழிபடுவார்கள்! அரசமரத்தின் கீழ் ஒரு பிள்ளையாரையும் உட்காரவைத்து தேங்காய் உடைப்பார்கள்!

ஒரு சிறு வேல் நட்டு அதனையும் வேல்முருகனின் மறு வடிவம் என வழிபடுவார்கள்!

நாகத்தின் புற்றையும் நாகதெய்வமென நினைத்து முட்டையும் பாலும் வைப்பார்கள்!

இமயமலையின் குகையொன்றில் உருகி வரும் பனிப்படிவங்கள் பனிலிங்கமாக உருவாக, அதனை வழிபட ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் மலை முகடுகளை நோக்கிப் பயணிப்பார்கள்.

பிரம்மாண்டமான நதியாக பெருக்கெடுத்து தென் இந்தியாவில் பாயும் காவிரி நதியின் சிறியதொரு ஊற்றுக் கண்ணை, அது புராண காலத்து தெய்வாம்சம் பொருந்திய இடம் என்று இன்றைக்கும் அங்கு சென்று பூஜிப்பவர்கள் இந்துக்கள்!

இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று பெரியார் போன்ற பல அறிஞர் பெருமக்கள் கூறினாலும் அதையும் மீறி இந்த நம்பிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. இத்தகைய நம்பிக்கைகள்தான், உருவ வழிபாடுகள்தான் இந்து மதத்தின் ஆதாரமும், மூல பலமும் ஆகும்!

எனவே, மேற்கூறப்பட்ட பிரபலமான இந்து மையங்களை ஆலயம் என்று கூறுவீர்களா? அல்லது வழிபாட்டுத் தலங்கள் என்று கூறுவீர்களா?

இவ்வளவுக்கு ஏன், இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் கேரளத்தின் சபரிமலை ஐயப்பன் ஆலயம் இருக்கும் இடம் மிகவும் சிறியதுதான் என்பதை அங்கு சென்று பார்த்த பலரும் உணர்ந்திருப்பார்கள்.

ஆனால், அதனால் அந்த இடத்தின் மகிமையும், ஈர்ப்பு சக்தியும் எந்தவிதத்திலும்  குறைந்துவிடவில்லை – பிரம்மாண்டமான எத்தனையோ ஆலயங்களை விட அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தலமாக – கோடிக்கணக்கில் காணிக்கைகள்  குவியும் தலமாக சபரிமலை திகழ்கின்றது.

அதன் சுற்றுவட்ட இடங்கள்தான் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கின்றதே தவிர, ஆலயம் இன்னும் பதினெட்டே படிகளைக் கொண்ட சிறிய ஆலயம்தான்!

கோர்ட்டுமலை பிள்ளையார் ஆலயம் கூட சிறியதுதான்!

ஏன், நமது கோர்ட்டுமலை பிள்ளையார் கோவில் கூட அளவில் பார்த்தால், அவர் அமர்ந்திருக்கும் இடத்தின் சுற்றளவைப் பார்த்தால், அது மிகவும் சிறியதுதான்! தெங்கு அட்னானின் அளவுகோலை வைத்து அளந்தால், அதுவும் வழிபாட்டுத் தலம்தான்!

ஆனால் இன்றைக்கும், பூஜை, நியமங்களில், எந்த ஒரு பெரிய ஆலயத்திற்கும் நிகராக கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் திகழ்கின்றது. பக்தர்களையும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் ஈர்க்கின்றது. தினமும் இரு வேளையும் சங்காபி‌ஷேகம் தவறாது நடைபெறும் அந்த சிறிய ஆலயம் போன்று உலகில் வேறு எங்கும் நடைபெறுவதில்லை என்றும் பலர் கூறுகின்றார்கள்.

எனவே,

ஓர் ஆலயம் இருக்க வேண்டுமா? அல்லது உடைக்கப்பட வேண்டுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றியமைக்கப்பட வேண்டுமா என்பதை வேண்டுமானால் அரசாங்கமோ, அதிகாரமோ, அமைச்சரோ முடிவு செய்யட்டும்.

அதனை ஏற்பதும், எதிர்த்துப் போராடுவதும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், இயக்கவாதிகள், ஆலய நிர்வாகிகளின் பொறுப்பு!

ஆனால், ஓர் இடம் ஆலயம் என்னும் ஆகம விதிகளுக்குள் அடங்குமா அல்லது வழிபாட்டுத்தலம் என தரம் பிரித்து இறக்கப்படுமா என்னும் முடிவை இந்துக்களின் பக்தியும், காலமும் முடிவு செய்யட்டும்!

தெங்கு அட்னான் அல்ல!

 

-இரா.முத்தரசன்