Home நாடு தெங்கு அட்னான் விடுதலை- சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

தெங்கு அட்னான் விடுதலை- சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானின் விடுதலையை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மேல்முறையீட்டுக்கான மனுவை இன்று திங்கட்கிழமை (ஜூலை 19) சட்டத்துறை அலுவலகம் சமர்ப்பித்ததாக பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.

ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் 2016-இல் வாங்கியதற்காக தொடரப்பட்ட வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெங்கு அட்னானுக்கு 2 மில்லியன் அபராதமும் 12 மாத சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

#TamilSchoolmychoice

அந்தத் தண்டனைக்கு எதிராக முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேல்முறையீட்டில் அவர் வெற்றி பெற்றார்.

தெங்கு அட்னானின் குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி முறையாக சட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தவில்லை என 2-1 பெரும்பான்மையில் கடந்த ஜூலை 16-இல் தீர்ப்பை வழங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

தெங்கு அட்னான் பெற்ற 2 மில்லியன் தொகை இரண்டு தேர்தல்களுக்கான நன்கொடை என்றும் அதை இலஞ்சமாக வகைப்படுத்த முடியாது என்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

70 வயதான தெங்கு அட்னான் தனது குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  தெங்கு அட்னானுக்கு 12 மாத சிறைத்தண்டனையும், 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

தெங்கு அட்னான் புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமாவார்.