செப். 12- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதும் இது வலுப்பெற்றது. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என பேசினார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களையும் விஜய் சந்தித்தார். பொதுக் கூட்டங்களிலும் பேசினார்.
ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிராமங்கள் வரை மக்கள் இயக்கத்துக்கு கிளை அணிகளும் உருவாக்கப்பட்டன.
கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெளிப்படையாக தனது அரசியல் முடிவை அறிவித்து பிரசாரங்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அரசியல் முடிவு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே இருந்தார்.
`தலைவா’ படம் மூலம் தனது அரசியல் கருத்துக்களை பகிரங்கப் படுத்துவார் என பேச்சு நிலவியது. அப்படம் திட்ட மிட்டபடி ரிலீசாகாமல் சர்ச்சைகளிலும் சிக்கியது. அதிலும் விஜய்யின் தெளிவான அரசியல் முடிவுகள் எதுவும் இல்லை.
விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விஜய்யிடம் நீங்கள் விரைவில் அரசியலுக்கு வருவீர்களா? தலைவா படத்திலும் அதைத்தான் சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விஜய் `தலைவா’ படத்தில் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை. நீங்களாகத் தான் அப்படி நினைத்து இருக்கிறீர்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எங்கேயும் சொன்னதே இல்லை.
நான் அரசியல்வாதி இல்லை. எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தும் நான் இல்லை. நான் ஒரு நடிகன், என் முழு கவனமும் சினிமாவில் மட்டுமே இருக்கிறது என்றார்.