1980-ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சியில் டைனாஸ்டி என்னும் பெயரில் ஒளிபரப்பாகிய ஆங்கில அமெரிக்கத் தொடர் வெகு பிரபலம். ஒரு பணக்காரக் குடும்பம், பிரம்மாண்டமான வீடு, அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழும் மோதல்கள், எழும் பண ஆசைகள், எதிர்தரப்பு வணிகர்களின் போட்டி என நீண்டு கொண்டே போகும் அந்தக் கதை. அதை அப்படியே ஒரு திரைப்படமாக தமிழ்-தெலுங்குக்கு ஏற்ற வகையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபள்ளி.
ஏற்கனவே, தோழா என்ற மறக்க முடியாத சிறந்த படத்தை நாகார்ஜூனா-நமது கார்த்தி நடிப்பில் தந்தவர் இதே வம்சிதான்.
கதை-திரைக்கதை
தொலைக்காட்சித் தொடர் போல் நீள்கிறது என சமூக ஊடகங்களில் போட்டுத் துவைத்து எடுத்து வருகிறார்கள் படம் பார்த்த ரசிகர்கள். பணக்காரத் தந்தை சரத்குமார் (ராஜேந்திரன்) பணத்திலேயே குறியாக இருக்கிறார். மனைவியிடமும் கூட சிடுசிடுவென, கடுகடுவென வாழ்க்கை நடத்துகிறார். 3 மகன்களில் இருவரை மட்டும் தனது வணிக வாரிசுகளாக வழி நடத்துகிறார். கடைசி மகன் விஜய் மட்டும் அப்பாவுடன் முரண்பட, வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் கடைசி மகன் விஜய் (படத்திலும் அதே பெயர்தான்) 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீடு திரும்புகிறான். நிரந்தரமாகத் தங்குகிறான். ஏன் அந்த முடிவை எடுக்கிறான் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். இந்த 7 ஆண்டுகளாக திசைமாறிச் சென்றிருக்கும் சகோதரர்களையும் அவர்களின் குடும்பங்களையும் இணைத்து வைக்கிறான். வணிகத்தில் போட்டி கொடுக்கும் பிரகாஷ்ராஜூக்கு ‘தண்ணி’ காட்டுகிறான். இடையிடையே சண்டைக் காட்சிகளில் தனி ஆளாக பத்து இருபது பேரை அடித்துத் துவம்சம் செய்கிறான். அண்ணியின் தங்கையைக் காதலிக்கிறான். அட்டகாசமாக நடனமாடுகிறான். இறுதியில் சுபம்.
இப்படியாக படம் பார்க்கும்போது எல்லாமே ஏற்கனவே திரைப்படங்களில் அரைக்கப்பட்ட மாவுகள். காட்சிகளும் மெதுவாக நகர்கின்றன. வசனங்களில் அழுத்தம் இருந்தாலும், மனதில் நிற்கும்படி இருந்தாலும், விஜய் வீட்டை விட்டு செல்வது நம்பும்படி சொல்லப்படவில்லை. இன்னும் அழுத்தமான சம்பவங்களைக் காட்டியிருக்கலாம்.
அதே போல பிரகாஷ்ராஜ் ஏன் சரத்குமார் குடும்பத்தின் மீது அத்தனை வன்மம் கொண்டிருக்கிறார் என்பதற்கான பின்னணிக் காரணங்களும் கூறப்படவில்லை. மகன்கள் திசைமாறி தவறான பாதையில் செல்வதற்கான வலுவான காரணங்களும் காட்டப்படவில்லை. எனவே, படத்தின் கதையும் தொய்வாக நகர்கிறது. திருப்பங்கள் எனக் காட்டப்படுபவை பார்ப்பவர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
அசத்தும் விஜய்
தன் கதாபாத்திரத்தை உணர்ந்து தனக்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் விஜய். மற்றவர்களெல்லாம் வழக்கமான முறையில் வசனம் பேச, இவர் மட்டும் தனக்கே உரிய முறையில் கிண்டலாகப் பேசி கவர்கிறார்.
இன்னும் இளமை துள்ளும் தோற்றமும் உடல்வாகும் அவருக்கு ஒத்துழைக்கின்றன.
நிறுவனத்தின் இயக்குநர்களைத் தன் பக்கம் இழுக்கும் அவர் கூறும் குட்டிக் கதை சம்பவங்களும் அதில் தன் முந்தைய படங்களின் சம்பவங்களை இணைத்துச் சொல்வதும் வெடிச்சிரிப்பை வரவழைக்கும் – நினைவில் நிற்கும் காட்சிகள்.
ஒவ்வொரு படத்திலும் விஜய்யின் நடனத் திறமைகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. நடன இயக்குநர்களும் சிரமமான நடன அசைவுகளை அவருக்குத் தந்து, அவரின் நடனக் காட்சிகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.
‘ரஞ்சிதமே’ – பாடல் வரிகளாலும், விஜய்யின் நடனத்தாலும் மனதில் நிற்கிறது.
பலவீனங்கள்
படத்தின் மையக் கருத்து இன்றையக் குடும்பங்களுக்குத் தேவையானதாக இருந்தாலும், அதை சம்பவங்களின் மூலம், மனதில் பதிய வைக்காமல், வெறும் வசனங்களால் மட்டும் தோரணங்கள் கட்ட முயற்சி செய்திருப்பதுதான் படத்தின் தொய்வான கதைக்குக் காரணம்.
குடும்பம் நடத்துவது பற்றி ரசிகர்களுக்கு பாடம் நடத்துவது போல் இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் எப்போதும்போல் விஜய் தனி ஆளாக அத்தனை பேரை அடித்து வீழ்த்துவதை இன்னும் எத்தனை நாளைக்குப் பார்ப்பது? அதிலும், பெண் பிள்ளைகளைக் கடத்தும் தாதாவின் வட்டாரத்திற்குள் நுழைய முடியாது என காவல்துறையினரே பயப்படுகின்றனராம். அங்கு விஜய் ஒற்றை ஆளாக நுழைந்து அத்தனை பேரையும் துவம்சம் செய்கிறாராம் – கொஞ்சம் கூட காயம்படாமல்! அதன் பின்னரே போலீஸ் படையே அங்கு நுழைகிறது.
கதாநாயகி ராஷ்மிகாவுக்கு வழக்கம்போல் கவர்ச்சியான உடைகளில் பாடல் காட்சிகளில் வருவது – சில காட்சிகளில் விஜய்யைக் காதலிப்பது – அவ்வளவுதான் வேலை. வசனமே இல்லாமல் சில காட்சிகளில் மட்டும் வருகிறார் சதீஷ். படம் முழுக்க நகைச்சுவைக்காக வீட்டு வேலைக்காரனாக வரும் யோகிபாபு அவ்வப்போது கவர்கிறார்.
மற்ற நடிகர்களுக்கு நினைவில் நிற்கும்படியான காட்சிகளும் அமையாததால் அவர்களின் நடிப்பும் எடுபடவில்லை. பிரகாஷ்ராஜ் மிரட்டுவதோடு சரி. கடைசியில் விஜய் வழங்கும் நீண்ட அறிவுரையை அமைதியாகக் கேட்டுக் கொண்டு நிற்கிறார்.
ரஞ்சிதமே பாடலும், சிம்பு பாடியிருக்கும் தீ தீ பாடலும் மனதில் நிற்கின்றன.
விஜய்க்காக ஒரு முறை பார்த்து வைக்கலாம்!