செப்டம்பர் 22 – நைரோபி நகரின் பேரங்காடியில் அல் கைடா சார்பு இயக்கம் ஒன்று நடத்திய தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்த வேளையில், இஸ்ரேலிய நாட்டின் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும், அதன் ஆலோசகர்களும், பிணைக் கைதிகளை மீட்க கென்யாவுக்குள் நுழைந்துள்ளதாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகளை மீட்கவும், கென்யா நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு உதவி புரியவும், காயமடைந்தவர்களை காப்பாற்றி வெளியேற்றவும் இஸ்ரேலிய நாட்டு பாதுகாப்பு படையினர் கென்யாவுக்குள் நுழைந்துள்ளதாக ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புக் குழுவினர் பதில் தாக்குதல் எதனையும் நடத்தவில்லைஎன்றும், பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை பேரங்களில் ஈடுபடுவதற்காகத்தான், ஆலோசனை வழங்குவதற்காகத்தான் கென்யா நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக இன்னொரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை என இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஜெருசலம் போஸ்ட் என்ற பத்திரிக்கை கூறியது.
தாக்குதல் நடந்த பேரங்காடியில் பல இஸ்ரேலியர்கள் வணிக மையங்களை நடத்தி வந்தனர் என்றும் தாக்குதலில் சிக்கிக் கொண்ட இஸ்ரேலியர்கள் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் மற்றொரு தகவல் கூறுகின்றது.
அடையாளம் கூற விரும்பாத கென்யா நாட்டு பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் நைரோபி வெஸ்ட் கேட் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை பாதுகாப்பு அதிகாரிகள், தாக்குதல் நடத்தப்பட்ட பேரங்காடி வளாகத்தை இஸ்ரேலிய இராணுவம் அணு அணுவாக சோதித்து வருவதாகத் தெரிவித்துள்ளர்.
ஆனால் கென்யா நாட்டு உள்துறை அமைச்சர் ஜோசப் ஒலே லெங்கு, வெஸ்ட் கேட் பேரங்காடி விவகாரம் ஒரு தேசிய நடவடிக்கை என்றும் இருப்பினும் பல வெளிநாடுகள் உதவிகள் வழங்க முன்வந்தன என்று கூறியுள்ளார்.
எண்ணிக்கை தெரியாத ஒரு குறிப்பிட்ட பிணைக் கைதிகளை ஏறத்தாழ 10 அல்லது 15 தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் இன்னும் பிணை பிடித்து வைத்துள்ளதாகவும் ஒலே லெங்கு தெரிவித்துள்ளார்.